நாடும் நடப்பும்

வானிலை ஆய்வில் சாதிக்க வரும் சென்னை

நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்து விட்டால் சென்னை கனமழையை எதிர்பார்த்து எச்சரிக்கையாகவே இருப்பது புரிகிறது. 2004–ல் புயல் எச்சரிக்கையுடன் சுனாமி தாக்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு புயல்கள் சென்னைக்கு பெரும் சேதம் ஏற்படுத்தியது.

மழையின்றி போனால் கோடையில் குடிநீருக்கு தவியாய் தவிப்பதும், மழை பெய்தால் வெள்ளக்காடாகி இருப்பதும் சென்னைவாசிகளுக்கு பழகிப் போனதாகவே இருக்கிறது.

இந்நிலையில் வானிலை அறிவிப்புகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் நாட்கள் வந்துள்ளது, கூடவே 70 அதிநவீன தானியங்கி வானிலை கண்காணிப்பு மையங்கள் நகர்ப்புற வெள்ள முன்எச்சரிக்கைக்கு நிர்மாணிக்க இருப்பதாக வந்து இருக்கும் செய்தி பாராட்டுக்குரியது.

மும்பையைத் தொடர்ந்து இந்த கண்காணிப்பு மையங்களை நிறுவும் பணியை சென்னை வானிலை ஆய்வு மையம் தொடங்கியுள்ளது.ஏற்கெனவே நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மாதவரம், டிஜிபி அலுவலகம் ஆகிய இடங்களில் தானியங்கி வானிலை கண்காணிப்பு மையங்கள் இயங்கி வருகின்றன.

தற்போது புதிதாக 50 முதல் 70 இடங்களில் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். சென்னையில் உள்ள ரேடார் மையத்திலிருந்து (சென்னை துறைமுகம்) 70 கிமீ சுற்றளவில் இந்த மையங்கள் நிறுவப்பட உள்ளன. இப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள் பலவற்றில் முதற்கட்டமாக 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேற்கு தாம்பரம் மற்றும் மதுரவாயலில் உள்ள இரு கல்வி நிறுவனங்களில் தற்போது நிறுவப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் மழைஅளவு மட்டுமல்லாது, காற்றின் வேகம், வெப்பம் குறித்த அளவுகளையும் எடுத்து, தன்னிச்சையாக கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு அனுப்பிவிடும். இதுநாள் வரை சென்னைக்கென பொதுவான வானிலை முன்னறிவிப்பு வழங்கப்பட்டு வந்தது. இனி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என பிரித்து அறிவிக்க முடியும். இதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் துல்லியமான வானிலை முன்னறிவிப்பை பெற்று, பயன்பெற முடியும்.

மேலும் கல்லூரி வளாகங்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வானிலை கருவிகள் தரும் தகவல்களை பெறுவது, அதை புள்ளி விவரமாக தொகுப்பது, அதன் அடிப்படையில் நகருக்கு ஏற்பட்டு வரும் வானிலை மாற்றங்கள், சேதங்களை எல்லாம் பற்றி படிக்க ஏற்ற பாட திட்டங்களையும் கொண்டு வந்தால் சென்னை வானிலை ஆய்வில் முத்திரை பதிக்கும் நகரமாக உயரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *