சிறுகதை

பிளேட்ட மாத்தி விட்டான் | ராஜா செல்லமுத்து

Spread the love

‘‘ஏய்…அனிதா.. இவ்வளவு நகைகள போட்டுட்டு போகப் போறியா..? என்று ஆச்சர்யமும் பயமும் கலந்து கேட்டான் கணவன் சந்தோஷ்.

‘‘ஆமா..அதுக்கு என்ன இப்போ..? என்று அலட்சியப் பதிலையே.. தன் கணவனுக்குத் தந்தவள் அவன் பேசுவது எதையும் சட்டை செய்யாமலேயே அணிகலன்களை அணிவதிலேயே அக்கறை காட்டிக் கொண்டிருந்தாள்.

‘‘இல்லம்மா..இப்பவெல்லாம் ஊர் ரொம்ப கெட்டுக் கெடக்கும்மா.. சுவற்றிலேயே தொளைப் போட்டு நகைய திருடிட்டு போயிர்றானுக.. அப்பிடியிருக்கும் போது இப்பிடி அப்பட்டமா நகைகள போட்டுட்டு போனியின்னா அம்புட்டு தான்..’’ என்று சொன்ன கணவனின் பேச்சை அனிதா கொஞ்சங்கூட சட்டை செய்யவில்லை.

‘‘சரி நான் போயிட்டு வரவா..? என்று சொல்லிய அனிதாவை மேலும் கீழும் பார்த்தான் கணவன்.

அவள் நடந்து போகும் போதே அவனின் மனது பக் பக் என அடித்துக் கொண்டே இருந்தது. அவள் நடந்து போகும் போது கூட தெருவில் இருந்தவர்கள் திட்டாமல் இல்லை.

‘‘ஏன்.. இந்தப் பொண்ணு இவ்வளவு நகைகள போட்டுட்டு போகுது..

‘‘இருக்கு..போட்டுட்டு போறாங்க..’’

‘‘அது.. சரி எல்லாருக்கும் இல்லாமலா இருக்கு. எதுக்கும் ஒரு மொறை இருக்குங்க.. இவ்வளவு நகைகள போட்டுட்டு போனா எதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா.. என்ன பண்ணுவாங்க.. இவ்வளவு நகை என்கிட்ட இருக்குன்னு காட்டிட்டு இருந்தோம்னா. அவ்வளவுதாங்க..’’

என்று ஒருவர் பூடகம் போட

இப்படி அங்கிருந்தவர்கள் ஆளாளாளுக்குப் பேசிக் கொண்டிருந்தனர். இது எதையும் சட்டை செய்யாமல் போய்க் கொண்டே இருந்தாள் அனிதா.

பேருந்து நிலையம் வந்து நின்ற போது கூட அவளைப் பற்றிப் பேசுபவர்களின் பேச்சு அடங்கிய பாடில்லை.

‘‘இதெல்லாம் தப்பு..’’ என்று ஒரு பெண் சொல்ல,

‘‘ஒனக்கும் எனக்கும் தப்புன்னு தெரியுது..ஆனா..இந்த மாதிரி வர்ற பொம்பளைங்களுக்கு தெரியலையே..! என்று பேசிக் கொண்டிருக்கும் போது

‘‘ஐயய்யோ.. என்னோட நகை.. நக..’’ என்று அனிதாவின் அலறல் குரல் அந்தப் பகுதி முழுவதும் கேட்டது.

‘‘நான் சொன்னேல்ல..இதெல்லாம் நடக்கும்னு.. இவ்வளவு நகைகள போட்டுட்டு வரக்கூடாதுங்க..’’ என்று அவரவர் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டே இருந்தார்களேயொழிய தவறியும் திருடனைப் பற்றிப் பேசவோ அவனைப் பிடிக்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை.

அப்போது அதைப்பார்த்துக்கொண்டிருந்த மணி மட்டும் யாரும் எதிர்பாராத விதமாக திருடனை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான் .

நகையைத் திருடியவன் இதுவரை அவன் பின்னால் யாரும் வராததால் நிம்மதியாக ஓடிக் கொண்டிருந்தான். திரும்பி மணி துரத்துவதைப் பார்த்ததும் இப்போது மூச்சிரைக்க ஓட ஆரம்பித்தான்..

‘‘யார்ரா.. இவன்..? ஏன் இவன் நம்ம பின்னாடி ஓடி வாரான்..? என்று சந்தேகப்பட்டவன் மேலும் தன் வேகத்தை அதிகப்படுத்தினான்.

‘‘இவன இன்னைக்கு பிடிக்காம விடக் கூடாது..’’ என்ற முனைப்பில் ஓடிக்கொண்டிருந்தான் மணி

‘‘திருடனைப் பிடிக்காமல் விடமாட்டேன்..’’ என்று மணியும் இவனிடம் சிக்கக் கூடாது என்று திருடனும் ஓடிக்கொண்டிருந்தனர்.

மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்த திருடனைப் பட் எனப் பிடித்தான் மணி. அவன் பிடியிலிருந்து நழுவ என்னென்னமோ செய்து பார்த்த திருடனுக்கு வாய்ப்பு வாய்க்கவே இல்லை. மணியின் பிடியிலிருந்து நழுவ முடியாமல் நங்கூரம் அடித்தது போல மாட்டிக் கொண்டான்.

‘‘சார்..என்னைய விட்டுடுங்க சார்…. ப்ளீஸ் உங்களுக்கு எவ்வளவு நகை வேணும்னாலும் தாரேன். என்னைய விட்டுருங்க சார். எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் மணி அவனை விடுவதாக இல்லை.

நகையைப் பறிகொடுத்த அனிதா எங்கோ நின்று கொண்டு அழுது கொண்டிருந்தாள். திருடனைப் பிடித்த மணி நேரே அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு அவனைக் கொண்டு சென்றான். உள்ளே போன மணியை அப்படியே திருப்பி விட்டான் திருடன்.

‘‘சார்..இந்த ஆளு.. ஒரு பொண்ணுகிட்ட நகைய திருடிட்டு ஓடுனான்.. ஆள கையோட பிடிச்சு கொண்டு வந்திருக்கேன். இவனத் தூக்கி உள்ள போடுங்க..என்று மணியை மாட்டி விட்டான் திருடன்.

‘‘டேய்.. என்னடா பிளேட்டவே மாத்தி விடுற..? நீ திருடனா..? நான் திருடனா..? என்று மணி புலம்ப….

‘‘சரி.. சரி.. ரெண்டு பேரும் சண்ட போடாதீங்கப்பா.. யாரு திருடன்னு நீங்க முடிவு பண்ணக் கூடாது.. அப்படிப் போயி ஓரமா ஒக்காருங்க..’’ என்று போலீஸ் சொல்ல

‘‘சார் நான் திருடன் இல்ல சார்.. இவன் தான் திருடன்..’’ என்று மணி சொல்ல

‘‘அத.. நீ.. சொல்லாதே..பொருள் பறி குடுத்தவங்க.. வரட்டும் சொல்லட்டும்..’’ என்று போலீஸ் சொல்ல…

‘‘இப்பத்தான் தெரியுது.. இப்பவெல்லாம் தப்பு நடந்தா.. ஏன் எவனும் உதவி செய்ய மாட்டேன்கிறானுகன்னு..’’ என்று புலம்பிய மணிக்கு கிறுகிறுவென வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *