செய்திகள்

சந்திரயான்–3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்

புதுடெல்லி, பிப்.22–

நிலவை ஆய்வு செய்வதற்கான ‘சந்திரயான்–3’ விண்கலம் அடுத்த ஆண்டு 2022–ல் விண்ணில் ஏவப்பட வாய்ப்புள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் கூறினார்

இந்தியாவில் நிலவை ஆய்வு செய்யும் திட்டத்தின் கீழ் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி ‘சந்திரயான்-–2’ விண்கலத்தை இஸ்ரோ ஏவியது. நாட்டின் மிகுந்த சக்தி வாய்ந்த ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் அந்த விண்கலம் ஏவப்பட்டது. நிலவைச் சுற்றியபடி ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டா்’ வெற்றிகரமாக பிரிந்து செயல்பட்டபோதிலும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்கான ‘ரோவா்’ வாகனத்துடன் பிரிந்து சென்ற ‘விக்ரம்’ லேண்டர் நிலவின் பரப்பில் திட்டமிட்டதைவிட வேகமாக இறங்கி, மோதியதால் தொடர்பை இழந்தது.

அதனைத் தொடர்ந்து, நிலவை ஆய்வை செய்வதற்கான ‘சந்திரயான்–-3’ திட்டத்தை இஸ்ரோ அறிவித்தது. இந்தத் திட்டம் 2020-ம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கால் திட்டம் தாமதமானது.

இந்த நிலையில், ‘சந்திரயான்–-3’ திட்டத்தை அடுத்த ஆண்டில் செயல்படுத்துவதற்கான பணிகளை இஸ்ரோ தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:–

‘நாங்கள் சந்திரயான் – -3 திட்டப்பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். இது, சந்திரயான்-2 மாதிரியே உள்ளமைவைக் கொண்டிருக்கும். ஆனால் இதற்கு ‘ஆர்பிட்டர்’ இருக்காது. சந்திரயான்-2 உடன் ஏவப்பட்ட ஆர்பிட்டரே ‘சந்திரயான்-3’-க்கும் பயன்படுத்திக்கொள்ளப்படும். அதை நோக்கி ஒரு முறையில் நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அனேகமாக, அடுத்த 2022-ம் ஆண்டுவாக்கில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்.

ககன்யான் திட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பரில் விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. அது, இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறும். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்.

ககன்யானின் பிரதானமான மூன்றாவது கட்டத்தில், 2022-ம் ஆண்டில் 3 இந்திய வீரர்கள் விண்வெளிக்கு அனுப்ப எண்ணியிருக்கிறோம். அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பயிற்சி பைலட்டுகள் தற்போது ரஷியாவில் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதை பொறுத்தவரை, நிறைய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அனைத்து தொழில்நுட்பங்களும் மிகச் சரியாக இருக்கின்றன என்று உறுதி செய்யப்பட்ட பின்பே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாளை நாங்கள் முடிவு செய்வோம்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *