போஸ்டர் செய்தி

வீட்டுக் காவலில் சந்திரபாபு நாயுடு

Spread the love

அமராவதி,செப்.11–

ஆந்திராவில் ஆளும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி செல்ல முயன்ற தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் மற்றும் கட்சி முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றது முதல் தற்போது வரை, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியுள்ளது. இதனை கண்டிக்கும் வகையில், கர்னுல் மாவட்டத்தில் உள்ள அதம்கூர் நகரில், பேரணி நடத்த முடிவு செய்த அக்கட்சி, அப்போது ஜனநாயகத்தை காக்க வேண்டும், மனித உரிமைகளை காக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் எனக்கூறியது. ஆனால், இந்த பேரணிக்கு, தெலுங்கு தேசம் அனுமதி வாங்கவில்லை என மாநில அரசு கூறியது.

இந்நிலையில், இன்று பேரணிக்கு தடை விதித்த போலீசார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, மகன் நாரா லோகேஷ் மற்றும் கட்சி முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்தனர். சந்திரபாபு வீட்டிற்கு செல்ல முயன்ற தொண்டர்களையும் கைது செய்தனர்.

மேலும் நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான பூமா அகிலா பிரியாவும் முன்னெச்சரிக்கையாக, நோவோடெல் ஓட்டலில் காவலில் வைக்கப்பட்டார்.

வீட்டு காவலில் வைக்கப்பட்டதை தொடர்ந்து சந்திரபாபு, இன்று காலை 8 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இரவு 8 மணி வரை இந்த போராட்டம் தொடரும் எனக்கூறியுள்ளார்.

இந்த நிலையில் டெலி கான்பரன்ஸ் மூலம் மாநிலம் முழுவதும் கட்சி தலைவர்களை தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, ஆளும் கட்சியின் போக்கை கண்டித்து கண்டித்து இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை தான் வீட்டிற்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் தீவிர போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்திரபாபு நாயுடு, போலீஸ் காவலை மீறி பேரணிக்கு புறப்பட தயாரானார். ஆனால் அவரது வீட்டு கேட்டை மூடிய போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *