செய்திகள்

தமிழகத்தில் ட்ரோன் நிறுவனம் உருவாக்கப்படலாம்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

சென்னை, டிச.17–

தமிழகத்தில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா இம்மாதம் 22–ந்தேதி முதல் 25ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ‘தற்சார்பு இந்தியாவுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத்தலைவரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:–

உலகில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு தானியங்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. அதேநேரம் தண்ணீர் தட்டுப்பாடு, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் அதற்கு சிக்கலாக உள்ளன. இதை சரிசெய்ய வயலில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட வேளாண் பணிகளுக்கு ட்ரோன் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்ப பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும்.

ஏனெனில், ட்ரோன் தொழில்நுட்பத்தின் வாயிலாகவே தென்னிந்தியாவில் வெட்டுக்கிளியின் தாக்குதல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன. இதன்மூலம் 40,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதனுடன் நீர்ப்பாசன மேலாண்மையும் மேம்படும்.

பொதுவாக வாழைத்தண்டில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நாருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. ஆனால் வாழை நாரில் இருந்து பல்வேறு பொருட்களை தயாரிக்க முடியும். இந்த துறையில் தமிழகத்துக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இதை நாம் பயன்படுத்திகொள்ள வேண்டும். உலகளவில் தற்சார்பு தாண்டிய வளர்ச்சியை அடைய இந்தியாவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அதன்படி நமது செயற்கைக்கோள்கள் பாதுகாப்பான தற்சார்பு இந்தியாவை உறுதிசெய்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை புதிய கண்டுபிடிப்புகளுக்கு உகந்ததாக உள்ளது. எனினும், புதிய கண்டுபிடிப்புகள் சமூக நலனை முன்னிறுத்தி அமைய வேண்டும். எனவே அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் முயற்சித்தால் தற்சார்பு இந்தியாவையும் உருவாக்க முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *