செய்திகள்

இன்று விவசாயிகள் நடத்திய நாடு தழுவிய ‘சக்காஜாம்’ சாலை மறியல் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து

இன்று விவசாயிகள் நடத்திய நாடு தழுவிய ‘சக்காஜாம்’ சாலை மறியல் போராட்டம்

டெல்லியில் 50 ஆயிரம் போலீசார் குவிப்பு

புதுடெல்லி, பிப். 6

வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் ‘சக்கா ஜாம்’ சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் போலீசார், துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று நாடு தழுவிய மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நண்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் இப்போராட்டம் நடைபெறும் என அவர்கள் அறிவித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலசுற்று பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் விவசாய சங்கங்கள் இன்று நாடு தழுவிய அளவில் நடைபெறும் ‘சக்கா ஜாம்’ போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. அந்த அழைப்பின் ஒரு பகுதியாக ஷாஜகான்பூர் எல்லைக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாபில், அமிர்தசரஸ் மற்றும் மொஹாலியின் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரில் ‘சக்கா ஜாம்’ இன் ஒரு பகுதியாக விவசாய சட்டங்களுக்கு எதிராக யெலஹங்கா காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

ஜம்மு காஷ்மீரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். டெல்லியின் எல்லைகளில் போராட்டம் செய்யும் விவசாயிகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறினர். அரியானாவில் பல்வாலுக்கு அருகிலுள்ள அதோகன் சவுக்கில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

டெல்லி மாநகரம், டெல்லி எல்லைகள் மற்றும் டெல்லி முழுவதுமான பகுதிகளில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக சுமார் 50 ஆயிரம் போலீஸ், துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் உள்ள 12 மெட்ரோ ரெயில் நிலையங்களும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. போராட்டத்திற்கு முன்னதாகவே சாலைகளில் பல அடுக்கு தடுப்புகள் மற்றும் முள்வேலிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *