செய்திகள்

‘நீட்’ தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி, பிப். 9–

எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பின் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘நீட்’ தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐஐஐடி. போன்றவற்றில் சேர்ந்து படிக்க ஜேஇஇ என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை நடக்கிறது.

இதன் மூலம் மாணவர்கள் 2 முறை தேர்வில் பங்கேற்கலாம். இதில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு இந்த தொழில்நுட்ப உயர்கல்வியில் சேர்ந்து படிக்கலாம். மாணவர்களின் மன உளைச்சலை போக்குவதற்காகவே இந்த நுழைவுத் தேர்வு வருடத்துக்கு 2 முறை நடத்தப்படுகிறது. இதை 4 முறையாக மாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது போல் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வையும் ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

தற்போது எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., இளநிலை மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இனி வருடத்துக்கு 2 முறை நடத்தப்படும்.

நீட் தேர்வின் புதிய நடைமுறை இந்த வருடம் முதல் நடைமுறைக்கு வருகிறது. 2 நீட் தேர்வுகளில் எதில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதைக் கொண்டு மருத்துவ படிப்பில் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *