போஸ்டர் செய்தி

ஓடும் பஸ்களில் பெண்களின் பாதுகாப்பிற்கு ரூ.75 கோடியில் கண்காணிப்புக் கேமிராக்கள்

Spread the love

சென்னை, பிப். 14–

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.75 கோடியில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க போக்குவரத்துத் துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து பேசியதாவது:–

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், நிர்பயா நிதியத்தின் மூலம் ரூ.75.02 கோடி செலவில், கண்காணிப்பு கேமிராக்கள் அனைத்துப் பேருந்துகளிலும் பொருத்தப்படும்.

அனைத்துப் பேருந்துகளிலும் பணமில்லா பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் வகையில் மின்னணு பயணச்சீட்டு முறையை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2020–21 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,716.26 கோடி ரூபாய் போக்குவரத்துத்துறைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு, தமிழ்நாடு அரசின் பொதுப் போக்குவரத்து வசதிகள் பெரும் பங்காற்றியுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், சராசரியாக 6.58 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட 19,496 பேருந்துகளை தினசரி இயக்கி வருகின்றன. போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் இயக்கச் செயல்பாட்டுத் திறன் குறியீடுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவதுடன், எரிபொருள் இயக்கத்திறனும் ஒரு லிட்டருக்கு 5.34 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது. விபத்து விகிதமும் ஒரு லட்சம் கி.மீ. இயக்கத்திற்கு 0.12 என்ற அளவிற்கு குறைந்துள்ளது.

ரூ.1580 கோடியில் 2213 புதிய பஸ்கள்

பேருந்துக் கட்டணங்களை குறைந்த அளவில் வைத்திருப்பதுடன், போக்குவரத்து கழகங்களின் இயக்கச் செயல் திறனையும், நிதி நிலையையும் மேம்படுத்தி, பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில், இந்த அரசு உறுதியுடன் உள்ளது. 1580 கோடி ரூபாய் மதிப்பிலான பாரத் ஸ்டேஜ் – VI தரம் கொண்ட 2213 புதிய பேருந்துகளை வாங்குவதற்கு ஏதுவாக, ஜெர்மன் வளர்ச்சி வங்கியிடமிருந்து முதற்கட்ட நிதியுதவி பெறுவதற்கான திட்ட ஒப்பந்தம், 2019–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26–ம் நாளன்று கையெழுத்திடப்பட்டது.

இத்திட்டத்தினைச் செயல்படுத்த 2020–21 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 960 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் பேம் இந்தியா – II திட்டத்தின் கீழ், 525 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளும் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளன.

உயர்தரமான பொதுப் போக்குவரத்து, பொது நன்மை அளிக்கும் என்பதை நன்கு உணர்ந்த இந்த அரசு, அதை செம்மையாக இயக்குவதற்கு அரசின் உதவி தேவை என்பதையும் நன்கு அறிந்துள்ளது. டீசல் விலை உயர்வினால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினை ஈடுசெய்ய 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 298 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2019–20 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டணமில்லா பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தால், 2020 ஜனவரி வரை ஏற்பட்ட செலவினை ஈடு செய்ய 1050 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31–ம் நாள் வரை ஓய்வு பெற்ற ஊழியர்கள் பெற வேண்டிய ஓய்வு காலப் பலன்களை வழங்கிட, 2019–20 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு குறுகிய காலக் கடனாக வழங்க 1093 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *