போஸ்டர் செய்தி

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்ரியா மீது வழக்குப் பதிவு

Spread the love

சென்னை, செப். 20–

வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை கொடுமைப்படுத்தியதாக நடிகை பானுப்ரியா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பிரபல தமிழ் நடிகை பானுப்ரியா சென்னை திநகர், விஜயராகவையா சாலையில் வசிக்கிறார். இவரது வீட்டில் ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டம், பந்த்ரவதா கிராமத்தைச் சேர்ந்த பிரபாவதி என்பவரது 15 வயது மகள் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சிறுமி, பானுப்ரியாவின் சகோதரர் கோபாலகிருஷ்ணனால் கொடுமைப்படுத்தப்பட்டதாக சிறுமியின் தாய் கடந்த ஜனவரி மாதம் ஆந்திரா போலீசில் புகார் அளித்தார். அது தொடர்பாக ஆந்திரா போலீசார் விசாரணை நடத்தினர். அதனையடுத்து தனது வீட்டில் வேலை பார்த்து வந்த அந்த சிறுமி வீட்டில் இருந்த நகை, பணம், ஐபேட், கேமரா, வாட்ச் உள்பட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடியதாக பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் நடிகை பானுபிரியா புகார் அளித்தார். அதன் பேரில் பாண்டிபஜார் போலீசார் அந்த சிறுமி மற்றும் அவரது தாய் பிரபாவதி ஆகியார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் தனது மகளை பானுப்ரியா, அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொடுமைப்படுத்தியதாக ஆந்திரா போலீசில் பிரபாவதி புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து கோதாவரி, சமன்கோட்டா போலீசார் 323 (கொடுங்காயம் ஏற்படுத்துதல்), 506 (மிரட்டல்), 341, 34 குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 75, 79 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்தது சென்னை திநகர் என்பதால் ஆந்திரா போலீசார் அந்த வழக்கு விசாரணையை சென்னை பாண்டிபஜார் போலீசுக்கு மாற்றம் செய்தனர். அதன் பேரில் பாண்டிபஜார் போலீசாார் நடிகை பானுப்பிரியா மீதும், அவரது சகோதரர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்னளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *