சென்னை, பிப்.27–
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சென்னை பள்ளி ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பயிற்சி பட்டறையை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் வெ.இறையன்பு ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு ஆணையாளர் கோ.பிரகாஷ் தலைமை வகித்தார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளை உலகத்தரத்திற்கு மேம்படுத்தும் பணியை சென்னை சீர்மிகு நகரம் மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து சிட்டிஸ் (CITIIS) திட்டத்தின் மூலம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 28 மாநகராட்சி பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்படும், இத்திட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இதன் முதற்கட்டமாக, அனைத்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கும் தகவல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்க 3 நாட்கள் பயிற்சி பட்டறைகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் டிஜிட்டல் போர்டுகளை பயன்படுத்துவது குறித்தும், இணையதள வசதிகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை தெளிவாகவும், திறமையாகவும் கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இறையன்பு
இந்தப் பயிற்சி பட்டறையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றிய அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் இறையன்பு கூறுகையில், மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கற்பித்தல் முறையை வழங்க ஆசிரியர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சியை ஏற்படுத்தியமைக்காக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சிட்டிஸ் திட்ட பிரதிநிதிகளுக்கும், பயிற்சிகளை வழங்கவுள்ள அண்ணா மேலாண்மை நிறுவன பேராசிரியர்களுக்கும் தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆணையாளர் கோ.பிரகாஷ், அண்ணா மேலாண்மை நிறுவன கூடுதல் இயக்குனர் எஸ். ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் ஆனந்த், மாநகராட்சி உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.