செய்திகள்

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள்: வேட்பாளர் செலவு வரம்பு அதிகரிப்பு

சென்னை, அக். 21-

மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவு வரம்பு 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக வேட்பாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதை மனத்தில் கொண்டு, பிரச்சாரத்தில் அதிக செலவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது, மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவு வரம்பு 70 லட்சம் ரூபாயில் இருந்து 77 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. யூனியன் பிரதேசங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முன்னர் 54 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என்று இருந்தது. தற்போது, செலவு விகிதம் 59.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 28 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என்ற வரம்பு உயர்த்தப்பட்டு, வேட்பாளர்கள் 30.80 லட்சம் ரூபாய் செலவழிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களிலும், சிக்கிம், மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களிலும் 22 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கலாம். பீகார் சட்டமன்றத் தேர்தல், நாடு முழுவதும் 58 சட்டமன்ற, ஒரு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறுவதால், வேட்பாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

தமிழகத்துக்கு இன்னும் ஏழு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு அரசியல் கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் ரூ.77 லட்சம், எம்.எல்.ஏ தேர்தலில் ரூ.30.80 லட்சம் வரை செலவு செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எனினும், கொரோனா பரவாமல் இருக்கும்படி பிரச்சாரங்களை கவனமுடன் கையாளும் வகையில், சானிட்டைசர்கள், முகக்கவசங்கள் வாங்குதல், கூட்டத்தை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்குக் கூடுதலாக நீட்டிக்கப்பட்ட 10 சதவிகிதத் தொகையைவிட அதிகமாகத்தான் செலவாகும் என்கிறார்கள் ஒரு தரப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *