செய்திகள்

கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் ரூ.1600 கோடி வரை பங்கு வெளியீடு செய்ய செபி அமைப்புக்கு விண்ணப்பம்

Spread the love

மும்பை, ஜன. 11–

கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனம் (காம்ஸ்) பங்கு வெளியிட அனுமதி வேண்டி பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்து இருக்கிறது. இந்த வெளியீடு மூலம் இந்நிறுவனம் ரூ.1,600 கோடி வரை திரட்ட திட்டமிட்டுள்ளது.

கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் நிறுவனம் தனது மூலதன தேவைகள் மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியைத் திரட்டும் வகையில் பங்கு வெளியீட்டில் களம் இறங்க முடிவு செய்துள்ளது. எனவே அதற்கு அனுமதி வேண்டி செபி அமைப்பிற்கு விண்ணப்பித்துள்ளது.

புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.1,500 கோடி முதல் ரூ.1,600 கோடி வரை திரட்ட கம்ப்யூட்டர் ஏஜ் மேனேஜ்மெண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.10 முகமதிப்பு கொண்ட 1,21,64,400 பங்குகள் வெளியிடப்பட உள்ளது. இதில் 50 சதவீத பங்குகள் தனிப்பட்ட முறையில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும். அதிக நிகர சொத்துள்ள தனிநபர்கள் எனப்படும் நிறுவனமல்லா முதலீட்டாளர்களுக்கு 15 சதவீத பங்குகளும், சில்லரை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கம்ப்யூட்டர் ஏஜ் நிறுவனத்தில் கிரேட் டெரைன் இன்வெஸ்ட்மெண்ட், என்.எஸ்.சி. இன்வெஸ்ட்மெண்ட்ஸ், எச்.டி.எப்.சி. உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்குதாரர்களாக இருக்கின்றன. அதன் புதிய பங்கு வெளியீட்டில் இந்தப் பங்குதாரர்கள் தமது பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட அளவை விற்பனை செய்ய உள்ளனர்.

கம்ப்யூட்டர் ஏஜ் பங்கு வெளியீட்டை கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல், எச்.டி.எப்.சி. பேங்க், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், நோமுரா பைனான்சியல் அட்வைசரி அண்டு செக்யூரிட்டீஸ் (இந்தியா) ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. வெளியீட்டுக்குப் பின் (காம்ஸ்) நிறுவனத்தின் புதிய பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *