முதல் மரியாதை படத்தில் பாரதிராஜா அறிமுகப்படுத்திய தீபனை நினைவிருக்கிறதா? நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடுத்தர வயதில் அவரை மீண்டும் பார்க்க வைத்திருக்கும் ஒரு படம் கேர் ஆப் காதல். நிஜத்தில் எப்படி இருக்கிறார்களே, அதை அப்படியே நிழலில் காட்டியிருக்கிறார்கள்.
49 வயதுவரை கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல் கட்டை பிரம்மச்சாரியாகவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். மனிதர் நடித்ததாகவே தெரியாது. காரணம் மேக்கப் இல்லை, ஏற்ற இறக்க மாடுலேஷன் வசன உச்சரிப்பு இல்லை, டூயட் பாட்டு இல்லை, விசேஷ ஆடை அலங்காரம் இல்லை … எதிரில் நின்று எப்படி பேசுகிறாரோ அப்படியே வெள்ளித்திரையில்! வித்தியாசமான அனுபவம் தீபனோடு சேர்த்து நமக்கும் தான்.
அலுவலகத்தில் பியூன் திலீப். அங்கே வேலைக்கு சேரும் பெண் அதிகாரி, அவரை காதலிக்கிறாள். ஏற்கனவே கணவனை இழந்தவள், 20 வயது இளம்பெண்ணுக்கு தாயானவள் அவள் தன்னைக் காதலிக்கிறேன், மண முடிக்கிறேன் என்று சொன்னதும் இன்ப அதிர்ச்சி. வெலவெலத்துப் போகிறார் தீபன். பயந்து நடுங்கும் அவரின் பயத்தை உடைத்து மணக்கிறாள். இடையில் நடப்பது என்ன? அது தான் திரைக்கதை.
இதற்கிடையில் பாலியல் தொழில் பெண்ணுக்கும் சாராயக்கடை வாலிபனுக்கும் நடுவில் ஒரு காதல்.
பள்ளியில் படிக்கிற காலத்தில்… விவரம் தெரியாத பருவத்தில் … அதிகார வர்க்கத்து சிறுமிக்கும் அடிமைத்தொழில் வயது சிறுவனுக்கும் இடையில் ஒரு காதல்.
ஐயர் குடும்பத்தில் பெண்ணுக்கும், கிருத்துவ இளைஞனுக்கும் இடையில் ஒரு காதல்.
இப்படி தீபன் காதல் கதையோடு இணையாக மூன்று காதலைக் காட்டி ஒரே புள்ளியில் நான்கு கதைகளையும் மையமாக்கி தீர்வு சொல்கிறார் இயக்குனர்.
காதலுக்கு வயது ஒரு தடையில்லை … என்பது இயக்குனரின் ( பிடி ) வாதம்! தீபன் ஒருவர் தான் முகம் தெரிந்தவர் ரசிகர்களுக்கு. மற்ற அத்தனை கதாபாத்திர நடிகர்களும் புதுசு, புதுசு!
இசை – ஸ்வீகர் அகஸ்தி. ஒளிப்பதிவு – குணசேகரன். கதை – மகா. பாடல் – கார்த்திக் நேதா. தயாரிப்பு : ராஜசேகர், ஜீவன், கார்த்திகேயன்.
ஹேமாம்பர் ஜஸ்டி இயக்குனர். ஏன் ரசனைக்கு ரசிகர்கள் வரவேண்டும் என்ற பிடிவாதத்தில் எடுத்திருக்கிறார். மெது வேகத்தில் நகரும் திரைக்கதை காட்சிகள் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்.
எந்த வயதிலும் காதல் வரும், காதலுக்கு வயது தடை இல்லை என்பதை சொல்லும் சித்திரம் கேர் ஆப் காதல்!