நாடும் நடப்பும்

சென்னை மின்சார ரெயிலுக்கு ஈடுகட்ட பஸ் வசதி தேவை

தமிழகம் எதிர்பார்த்தது போல் செப்டம்பர் 30 வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மீண்டும் ஒரு மாத காலம். அதாவது அக்டோபர் 31- வரை நீட்டிக்கப்பட்டு விட்டது. நாடெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாகவே இருக்கும் நிலையில் தமிழகம் பாதுகாப்பு கவசமாக உபயோகிப்பது ஊரடங்கை தான். அது வரவேற்கப்பட வேண்டிய நல்ல முடிவாகும்.

ஆனால் அத்தியாவசிய சேவைகள் உபயோகிப்பவர்கள் வசதிக்காக பல்வேறு சேவைகளின் நேரங்கள் நீட்டிக்கப்பட்டு விட்டது. சினிமா துறையினரின் கோரிக்கையை ஏற்று படக் குழு வேலைகளில் 100 பேர் வரை பாதுகாப்பு கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை உறுதி செய்து பணியாற்ற அனுமதி தரப்பட்டுள்ளது.

தற்போது மத்திய அரசு அனுமதித்து விட்டாலும் ஆனால் திரையரங்குகளுக்கும் அரங்கங்களுக்கும் அனுமதி கிடையாது. காரணம் இன்றைய யுகத்தில் இவை எல்லாம் ஏ.சி. அரங்கங்கள், தமிழகத்தில் உடனடியாக இயங்க கதவை திறந்து வைத்து உபயோகிக்க முடியாது என்பதை உணர்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.

சிறுவர்கள் விளையாட பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் நீச்சல் குளங்களுக்கும் அனுமதி கிடையாது. இதில் கடற்கரையும் உண்டு. அவை அனுமதிக்கப்பட்டால் ஜன நெரிசலில் கடல் அலை என வந்து விடும் அபாயம் இருப்பதால் அதை அனுமதிக்காமல் இருக்கிறார்கள்.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்ததுடன் அதை அமல்படுத்தி விட்டே செயல்பட அனுமதித்துள்ளது.

அதேபோல் வாரச் சந்தைகளுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால் உரிய பாதுகாப்பு அம்சங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டில் அடைந்து கிடப்பதா? வெளியேறி விடலாம் என எண்ணுபவர்களுக்கு வசதியாக மீன் மார்க்கெட், காய்கறி அங்காடிகள் திறக்கப்பட்டு இருப்பதால் பலரும் வருவதை காணமுடிகிறது.

தமிழ் அரசு இது போன்ற இடங்களில் சமுதாய விலகலும் முககவசம் அணிந்து இருப்பதையும் கண்காணிக்க விசேஷ ஏற்பாடுகளை செய்தாக வேண்டும்.

சமீபமாக பல்வேறு இடங்களில் ஐந்து பேருக்கு மேல் படுசகஜமாக முகக்கவசம் கூட அணியாமல் பேசிக் கொண்டு பொழுது போக்குபவர்கள் அதிகரித்து வருகிறது.

இதை எல்லாம் பார்க்கும் போது மீண்டும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்தால் நல்லது தான் என நினைக்க வைக்கிறது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி நிபுணர்களுடன் ஆலோசித்து நல்ல தீர்வு கண்டாக வேண்டும்.

அப்படி ஊரடங்கை அறிவிக்கும் ஞாயிறுகளில் சாலை பராமரிப்பு, மின்சார இணைப்பு, தண்ணீர் வசதி பணிகள் போன்ற பொதுப்பணித் துறை வேலைகள் மட்டும் நடைபெற உத்தரவிடலாம்.

வெறிச்சோடி இருக்கும் சாலைகளில் பொதுப்பணி சேவை வேலைகளை சுலபமாக செய்துவிட முடியும் அல்லவா!

அதுபோன்றே சென்னையின் பாரம்பரிய மின்சார ரெயில் சேவையை பற்றியும் தீவிரமாக ஆலோசித்தாக வேண்டும்.

அரக்கோணம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் போன்ற சற்றே தொலைதூர பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென்னைக்கு வரும் பலருக்கு காரில் வரும் வசதி கிடையாது.

அவர்களில் பெருவாரியான பேர் இருசக்கர வாகனங்களில் தான் வந்து போகிறார்கள்.

அவர்கள் எல்லாம் இதுவரை ஓய்வாக, தூங்கியபடி ரெயிலில் வந்து போனவர்கள் என்பதால், இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பலரும் பாதுகாப்பான முறையில் பயணிப்பதில் குறைபாடுகள் இருப்பதை மறந்து விடக்கூடாது.

சென்னையில் அரசு பணிகள், கணினி நிறுவனங்கள் உட்பட பல அலுவலகங்கள் முழுமையாக செயல்பட ஆரம்பித்து விட்டதால் சென்னையின் அருகாமை சிறு நகர பகுதிகளில் இருந்து வந்து போவோரை நிறுத்தவும் முடியாது.

இதை எல்லாம் மனதில் கொண்டு முதல்வர் பழனிசாமி பழனிசாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் நிபுணர்களுடன் ஆலோசித்து பஸ் போக்குவரத்தை இந்த ரெயில் பிரயாணிகளின் நேரத்தை மனதில் கொண்டு புதிய வழித்தடங்களாக இருந்தாலும் அதில் சேவையை அறிமுகப்படுத்த உத்தரவிடலாம்.

மினி பஸ் அல்லது சாதாரண பஸ் போக்குவரத்தில் குறைந்தது 2 சக்கர வாகன ஓட்டுனர்களை பிரயாணம் செய்ய வைத்து விடுவதால் விபத்தில்லா சாலைப்போக்குவரத்து உறுதியாகுகிறது.

இன்றைய நவீன பெரும் தரவு அதாவது Big Data கணினி சமாச்சாரங்களின் துணையுடன் பயணிகளின் உபயோக நேரத்தை தெரிந்து கொண்டு தேவை அடிப்படையில் பஸ் சேவைகள் இயங்க ஆய்வுகளும் அவசியமாகுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *