செய்திகள்

சிறு, குறு தொழில் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு அலுவலகம்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

Spread the love

சென்னை, செப்.20–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 19–ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கூட்டமைப்பு கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து, அதன் செயல்பாட்டினை துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும், “குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு” ஒன்று உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 13.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள சிட்கோ கூட்டமைப்பு கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தை திறந்து வைத்து, அதன் செயல்பாட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

இந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பானது, தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கிடவும், வெளிநாட்டு வர்த்தகர்களின் ஒத்துழைப்பைப் பெற்றிடவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்ப்பதையும் முக்கிய குறிக்கோள்களாக கொண்டு செயல்படும்.

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு விரைவாகவும், உரிய காலத்தில் அனுமதி வழங்கிடவும், ஒற்றைச்சாளர முறையை செயல்படுத்துவதற்கான ஒருங்கிணைப்பு முகமையாகவும் இந்த அமைப்பு விளங்கும். மேலும், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான முதலீடுகளை மேம்படுத்துதல், வணிக அமைப்புகள், தொழிலக அமைப்புகள் மற்றும் முதலீட்டுக் கொள்கையை முன்மொழிபவர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் படிப்படியாக ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முகமையாகவும் இந்த அமைப்பு செயல்படும்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பென்ஜமின், தலைமைச் செயலாளர் க. சண்முகம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹன்ஸ் ராஜ் வர்மா, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர், முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பின் மேலாண்மை இயக்குந த.பொ. ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *