செய்திகள்

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

Spread the love

காஞ்சீபுரம், டிச. 3–

சோமங்கலம் ஏரியில் நண்பர்களுடன் படகில் சென்ற 17 வயது சிறுவன் கார்த்திக் நீரில் மூழ்கி பலியானார்.

தாம்பரத்தை அடுத்த பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (17). சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் (17), ஜெயபிரகாஷ் (17); நடுவீரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரிஸ்வான் (17), சித்திக் (17); பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (17); மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (17); காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது (17), முகமது பயஸ் (17). இவர்கள் அனைவரும் நடுவீரப்பட்டு அடுத்த தர்காஸ் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர்.

நண்பர்களான இவர்கள், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்பட்டதால் சோமங்கலம் ஏரிக்கு சென்றனர். அந்த ஏரியின் கரையில் மீன்பிடிப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த படகில் அனைவரும் ஏரியில் சவாரி சென்றனர். அப்போது பலத்த மழை பெய்யவே படகு ஏரியின் மையப் பகுதிக்கு சென்றது.

இதனால் படகை கரைக்குத் திருப்புவதற்காக கார்த்திக் மற்றும் சஞ்சய் ஆகியோர் ஏரியில் குதித்தனர். அவர்களில் கார்த்திக்கிற்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். சஞ்சய் சிறிது நேரம் நீச்சல் அடித்து மேடான பகுதிக்கு சென்றார்.

கார்த்திக் நீரில் மூழ்கியது குறித்து சோமங்கலம் காவல் நிலையத்திற்கும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தாம்பரம் தீயணைப்பு நிலையங்களுக்கும் நண்பர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியின் மேடான பகுதியில் நின்றிருந்த சஞ்சயை மீட்டு வந்தனர். நீரில் மூழ்கிய கார்த்திக்கின் சடலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவாகி விட்டதால் கார்த்திக்கின் சடலத்தை தேடும் பணியை தீயணைப்புத் துறையினர் தற்காலிகமாக நிறுத்தினர்.

இச்சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *