நாடும் நடப்பும்

கருந்துளை ஆய்வுகளும் இந்திய விஞ்ஞானிகளின் பங்கும்

பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு? என்பது மிக ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான விடை இன்று மாலை தெரிய வந்துவிடும். இந்த விருதுக்கான தகுதியானவரை தேர்வு செய்யப்பட இருக்கும் இறுதி பட்டியலில் 211 தனிநபர்கள், 107 அமைப்புகள் இருக்கிறார்கள்.

ராணுவ நடவடிக்கைகள், சுற்றுப்புற சூழ்நிலை பாதுகாப்பு, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பலரை மீட்பது போன்ற உலக சிக்கல்களுக்கு தீர்வு கண்ட ஒருவருக்கோ அல்லது கூட்டாக சிலருக்கோ தான் அந்த மிகப்பெரிய கவுரவம் தரப்படும்.

அந்தப் பட்டியலில் இருக்கும் ஜெர்மனியில் உள்ள சிறுமி கிரேட்டா துன்பர்க் இயற்கையை பாதுகாக்க வேண்டும் என உலகத் தலைவர்களை கேட்டு வருகிறார். பள்ளிக்குச் சென்ற காலத்தில் மதியம் தனியாக கையில் இயற்கையை போற்றும் வாசகத்தை ஏந்தியபடி மவுனமாக போராடத் துவங்கினார்.

எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி இப்படி போராடிய அச்சிறுமியின் செயல்பாடு உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் பேச சிறப்பு அழைப்பை பெற்றார்.

ஏதோ போனோம், பேசினோம், திரும்பினோம் என்று இருக்கக்கூடாது என்பதற்காக கிரேட்டா ஜெர்மனியிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டார்.

விமானத்தில் பறந்தால் நியூயார்க் செல்ல அதிகபட்சம் 10 மணி நேரம் தான், ஆனால் கப்பலில் சென்றால் மூன்று மாதமாகும்! ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் விமானத்தில் பறந்தால் சுற்றுப்புற சீர்கேடு என கூறிவிட்டு கப்பல் அதுவும் வசதிகள் ஏதுமில்லாத சாதாரண கப்பலில் பயணத்தை மேற்கொண்டு ஐ.நா. சபை கூட்டத்திற்கு உரிய நேரத்துக்கு முன்பே வந்தும் சேர்ந்து உலகத் தலைவர்களை அசர வைத்தார்.

பேச அழைக்கப்பட்ட உடன் மைக்கை பிடித்த அந்த சிறுமி கடும் கோபத்துடன், ‘நீங்கள் எப்படி இப்படி செய்ய துணிந்தீர்கள்?’ என்று தான் ஆரம்பித்தாள், ‘How dare you?’ என கேட்டது நம்மைத்தான்! அதாவது நாம் செய்த தவறுகளால் இன்று சிறுவர்கள் சுற்றுப்புறச் சீர்கேட்டால் தவிக்கிறார்கள் என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார்.

பெரிய தலைவர்களையும் குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியையும் கூட விட்டு வைக்கவில்லை. அவரிடம் கேட்ட கேள்வி, ‘நீங்கள் ஏன் பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டீர்கள்’ என்பதற்கு இதுவரை டிரம்ப் எந்தப் பதிலையும் தெரிவிக்காமல் இருக்கிறார்.

மீண்டும் தாய்நாடு திரும்ப விமானத்தில் பறக்காமல் அதே கப்பலில் தான் கிரேட்டா திரும்பியுள்ளார்.

இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் யாராக இருந்தாலும் கிரேட்டா டிரம்பும் இருவருமே இதே விருதுக்கான போட்டியில் இருந்தவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

பத்திரிகை சுதந்திரத்துக்கு குரல் கொடுத்தவர்கள், குறிப்பாக ஹாங்காங்கில் நடைபெற்ற போராட்டத்தில் நடுநிலையாக செயல்பட்ட பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருந்தார்.

இந்த வாரத் துவக்கத்தில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு கூட்டாக இருவர் பெறப் போகிறார்கள்.

ஒருவரது கண்டுபிடிப்பு கருந்துளை உருவாக்கம் அதாவது Black Hole formation ஐன்ஸ்டீன் வெளியிட்ட சார்பியல் கோட்பாடுடன் சார்ந்து தான் இருப்பதாக நிரூபித்துள்ளார்.

அவருடன் சேர்ந்து வாங்க இருப்பவர் நமது விண்மீன் அதாவது கேலக்சியின் நடுவே அதிபெரிய மிக நெருக்கமான வடிவமைப்பு ஒன்று இருப்பதாக கண்டுபிடித்துள்ளார்.

இவர்கள் இருவரின் இன்றைய கண்டுபிடிப்புகளில் பின்னணியில் இந்திய விஞ்ஞானிகளின் ஆய்வுகளும் உதவி இருக்கிறது.

குறிப்பாக ஏ.கே. ரேசௌத்ரி (A.K.Raychaudhari) என்ற மேற்கு வங்காள விஞ்ஞானியின் கருந்துளை ஆய்வுகள் அதில் சார்பியல் கோட்பாடுகளின் நிர்ணயம் போன்றவற்றை பற்றி 1955ல் வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே சுட்டிக்காட்டியுள்ளார். 2005 ல் மறைந்து விட்டாலும் அவரது ஆய்வுகள் இன்றும் உலக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்து வருவது நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும். அவர் கூற்றுப்படி, பெருவெடிப்பு (Big Bang) நடக்கவே இல்லை; ஆனால் கரும் துளையில் இருந்தே அண்ட சராச அங்கங்கள் கடந்து வெளிவந்து கொண்டே இருப்பதாக கூறியுள்ளார்.

இவரது அடிச்சுவட்டில் சி.வி. விஸ்வேஸ்வரா (C.V.Vishveswara) என்ற விஞ்ஞானியின் ஆய்வுகள், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடுகளின் மகிமை, அண்ட சராசரம் எங்கும் பிரதிபலிப்பதை பற்றியதாகும். அவரது ஆய்வுகளும் கருந்துளைகள் எப்படி வான்வெளியில் செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. விஸ்வேஸ்வராவின் ஆய்வுகளின் பயனாக கருந்துளைகளின் பல அடுக்குகளின் தன்மைகள் பற்றி புரிந்துகொள்ள முடிகிறது.

முன்பே நமது தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானி எஸ்.சந்திரசேகர் தன் ஆய்வுகள் கருந்துளைகளின் குணங்கள், நட்சத்திரங்களின் உருவாக்கம் பற்றிய அரிய கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றுள்ளார்.

ஆக இம்முறை இயற்பியல் நோபல் பரிசின் பின்னணியில் இந்திய விஞ்ஞானிகளின் அறிவு திறன் பொதிந்து இருப்பதை மறந்துவிடக் கூடாது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *