வாழ்வியல்

பல் சொத்தையை தடுக்க புதிய முறை உருவாக்கம்!

ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பற்கள் சொத்தையாவதை தடுக்க புதிய முறையை உருவாக்கி உள்ளனர்.

பற்களின் மேலுள்ள இயற்கையான, ‘எனாமல்’ சிதைந்துவிட்டால், மீண்டும் உருவாகாது. செயற்கை இனிப்புகள், பல்லிடுக்கு உணவுத் துணுக்குகளால் வளரும் கிருமிகள் எனாமலை பதம் பார்ப்பதால், பற்கள் சொத்தையாகின்றன.

நம் வாயில் ஊறும் எச்சிலில் உள்ள பல வேதிப் பொருட்கள் பல் சொத்தையை தடுக்க வல்லவை. இருந்தாலும், அதையும் மீறி, பாக்டீரியாக்களால் எனாமலை அரித்துவிட முடிகிறது.

எனவே, எச்சிலில் உள்ள, ‘எச்., 5’ என்ற பெப்டைடுகளை மட்டும் எடுத்து, அதனுடன், பாஸ்போசெரீன் என்ற வேதிப் பொருளை கலந்து, அசல் பற்களின் மேல் பூசி ஆராய்ந்தனர், ஹாங்காங் ஆராய்ச்சியாளர்கள்.

அப்போது, அந்தக் கலவையால் பல் எனாமல் சிதைவதை தடுக்க முடியாவிட்டாலும், பல்லின் மேல் பாக்டீரியா படலம் உருவாவதை தடுத்து, பாக்டீரியாக்களை கொன்றன.

இதனால், எச் 5 மற்றும் பாஸ்போசெரீன் கலவையை ஜெல் வடிவில் தயாரித்து பல் துலக்கிய பின், அதை பற்களின் மேல் படரும்படி செய்தால், பல் சொத்தை உருவாகாமல், எனாமலுக்கு அரணாக இருக்கும் என, ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *