நாடும் நடப்பும்

தேசிய கட்சிக்கு வழிகாட்டலாக அமைய இருக்கும் பீகார் தேர்தல் முடிவுகள்

* புதிய கோணம் * புதுப்பாதை

தேசிய கட்சிக்கு வழிகாட்டலாக அமைய இருக்கும் பீகார் தேர்தல் முடிவுகள்

ஒரு வழியாக மூன்று கட்டங்களாக நடந்து முடிந்து விட்ட பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளிவந்து விடும். அது நாட்டிற்கு பல முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்ட இருக்கிறது.

தற்போதைய முதலமைச்சர் நிதீஸ் மீண்டும் நான்காவது முறையாகதேர்தல் களத்தில் நிற்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் தேசிய அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப இவரது ஐக்கிய ஜனதா தளக்கட்சியையும் பல்வேறு கொள்கை மாற்றங்களையும் செய்து கொண்டு வருகிறது.

ஒரு காலக் கட்டத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்ததால் பீகாரில் பிரபலமான நிதீஸ் தற்போது காங்கிரசை குறைகூறுவது செத்த பாம்பை அடிப்பது போல் மாறிவிட்டதால், காங்கிரஸ் எதிர்ப்பு கோஷத்தை அறவே கைவிட்டார்.

கடந்த இரு முறையும் பிரதமர் மோடியின் நற்பெயர் அலையால் வெற்றி இலக்கை பெற முடிந்தது. ஆனால் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் எதிர்ப்பு அலையை (Anti incumbency) எப்படி இம்முறை எதிர்கொள்வார்? என்பது பல கட்சி தலைவர்களுக்கு புதிய ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக அண்ணா தி.மு.க. தலைமைக்கு விரைவில் தேர்தலை சந்திக்கும் போது நிதிஸின் வெற்றி – தோல்வி நல்ல அனுபவ பாடமாக இருக்கப் போகிறது.

பிரதமர் மோடியின் ஆட்சி திறனை சுட்டிக்காட்டி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது இம்முறையும் சாத்தியமா? என்பதும் நாளை தெரிந்து விடும்.

இது பிரதமர் மோடியின் ஆட்சித் திறனை அங்கீகரிக்கும் தேர்தல் இல்லை என்றாலும் நிதீஸ்குமாரின் வெற்றிக்கு உதவுமா? என்பது நிச்சயம் அரசியல் களத்தில் ஆராயப்பட வேண்டிய ஒன்றாக இருக்கப் போகிறது.

ராகுல் காந்தியின் மிதமான தலைமையால் அவர்களது கட்சியினருக்கு உத்வேகம் தரும் எந்த வழிகாட்டலையும் வெளியிடாத நிலையில் மிகவும் பலவீனமடைந்து இருப்பது அறிந்ததே. ஆனால் காங்கிரஸ் கட்சியோ வேறு புது தலைமையை வரவேற்க முடியாத நிர்பந்தத்தால் மீண்டும் ராகுலையே தலைவராக செயல்பட வைத்து வரும் நிலையில் இருக்கிறார்கள்.

பீகாரில் ராகுலின் தேர்தல் பிரச்சாரத்தால் ஏற்பட இருக்கும் சாதக பாதகத்தை கண்ட பிறகு, அவர்கள் கட்சியிலும் புதிய சிந்தனைகள் உருவாகும் என்று எதிர்பார்ப்போம்.

ஒரு வேளை நிதீஸ் கட்சி ஜெயித்து ஆட்சியை பிடித்து விட்டால் தற்போது 70 வயதை எட்டிவிட்ட அவர், இவரது அரசியல் குருநாதர் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் வழியில் குடும்ப அரசியலை நுழைய விடாமல் தனது மகன் நிஷாந்த் குமாரை கட்சித் தலைமைப் பதவியில் அமர விடாமல் இருந்து விட்டால், அவர் வழியில் கட்சியையும் ஆட்சியையும் தொடரப் போவது யார்? என்ற கேள்வியும் எழுகிறது.

இம்முறை பீகார் வாக்காளர்களுக்கு நிதீஸை விட மாற்று வேட்பாளராக லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வியை பதவியில் அமர்த்தி விடலாமா? என்ற சிந்தனையுடன் வாக்களித்து இருக்கலாம்!

ஆக வாரிசு அரசியலால் நன்மையும் இருக்கிறது! அதை நிதீஸ் புரிந்து கொண்டு தனக்கு அடுத்த தலைமுறையையும் அடையாளம் காட்டி விட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

நிதீஸின் மூன்றாவது முறை வெற்றிக்கு அடித்தளம் போட்ட ஒரு உத்திரவாதம் “பூரண மது விலக்கு” அவரும் ஆட்சிக்கு வந்த சில வாரங்களில் குஜராத் மாநிலத்தில் இருப்பது போல் பீகாரிலும் எல்லா மது சாராயக் கடைகளையும் சாராய பார்களையும் மூடி விட்டார்.

ஆரம்பத்திலிருந்தே குடும்பத் தலைவிகளின் வரவேற்பை பெற்ற இம்முடிவு, அன்றாட ‘குடி’மகனின் வெறுப்பைத் தான் சம்பாதித்தது.

மது சாராயத்திற்கு அடிமைத்தனம் பெற்றவர்கள் மிகக்குறைந்த விலை கள்ளச் சாராயத்தை நாடினார்கள். அல்லது மிக அதிக விலையில் கள்ள மார்க்கெட்டில் ரகசியமாக வாங்கிக் குடித்தனர்.

இதனால் அதிருப்தியான பல வாக்காளர்கள் நிதீஸை மீண்டும் வெற்றி பெற செய்யாமல் தடுக்க எதிர் அணியில் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையிலிருக்கும் லல்லு பிரசாத்தின் கட்சிக்கு வாக்களித்து ஜெயிக்க வைக்கலாம்!

மது சாராய கொள்கையின் பின்னணியில் பீகார் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது உண்மையாகும்.

ஆனால் கூட்டணியில் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தும் எந்த விசேஷ உதவியை செய்யாதது பீகாரில் ஒரு புதிய எதிர்ப்பு அலையை பாரதீய ஜனதா சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இப்படியாக இரு பெரிய தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதீய ஜனதாவும் பீகாரில் தனியாக நின்று ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில் பிராந்திய கட்சியின் உதவியால் சட்டமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வைக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் சமீபத்தில் மறைந்துவிட்ட ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சியான லோக் ஜனதா கட்சியும் மூன்றாவது அணியாக பீகாரில் களமிறங்கியுள்ளது.

பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் மூன்றாவது அணியாக களத்தில் இருக்கும் இவர்களது கட்சியும் எத்தனை இடங்களை பிடிக்கப் போகிறது? என்ற கேள்வியும் மிக ஆர்வமாக கேட்கப்பட்டு வருவதால் பீகாரில் அடுத்த தலைமுறை தலைவர்கள் உருவாக இம்முறை தேர்தல் நல்ல அடிதளம் போட்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

நாளைய பீகார் தேர்தல் முடிவு யார் பக்கம்? என்பது தெரிந்து விடும். கூடவே மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? என்பதையும் பீகார் தேர்தல் முடிவு சுட்டிக்காட்டும்.

ஆக மொத்தம் ஜனநாயக அரசியலின் வெற்றி விழாவாக நாளைய தீர்ப்பு அமையப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *