செய்திகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பரதநாட்டிய இசைக்கலைவளர் இருக்கை: பொறுப்பாளராக விஜயலட்சுமி பூபதி நியமனம்

Spread the love

சென்னை, டிச.2

தரமணியில், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கி வரும் நிறுவனமான உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு இருக்கைகள் இருப்பதைப்போல, தற்பொழுது பரதநாட்டிய மற்றும் இசையை வளர்க்கும் பொருட்டு, பரத நாட்டிய இசை கலை வளர் இருக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதனுடைய துவக்க விழா தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்த்தாய் ஊடக அரங்கில் 01.12.2019 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பரதநாட்டிய இசை கலை வளர் இருக்கை பொறுப்பாளராக ச.விஜயலட்சுமி பூபதி பணியேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜன் பேசியதாவது:

“நான் 2ஆம் வகுப்பு படிக்கிறபோது மேடையில் நடனம் ஆடினேன். அப்பொழுது, எனக்கு சக்தி வேடமும், என் உறவுக்கார பெண் ஒருத்திக்கு சிவன் வேடமும் கொடுத்தார்கள். அந்த மேடையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த படத்தின் திரைப்பாடலுக்கு நடனமாடி இருந்தேன். அப்பொழுது எல்லோரும் என்னை பாராட்டினார்கள். இலக்கியத்தை படிக்கத் தொடங்கி,தொல்காப்பியத்தை ஆழ்ந்து படித்தேன்.அதில் இருந்த ஒரு சொல்தான் “நங்கை” அதில் ‘திரு’வை சேர்த்து

(திரு என்றால் அழகு) திருநங்கை என்ற சொல்லை முதலில் 1996இல் எனக்கு நானே என் பெயருக்கு முன்பாக போட்டுக்கொண்டேன்.

பிறகு அதனை தமிழக அரசினுடைய கவனத்திற்கு கொண்டு சென்று அரசிடம் வலியுறுத்தி இந்த சொல்லை திருநங்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அதை அரசு ஏற்றுக் கொண்டதை இந்த நேரத்தில் நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். பரதநாட்டியத்திற்கும் இசைக்கும் இந்த மாதிரியான இருக்கைகள், இக்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று.

விஜயலட்சுமிக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் காத்து இருக்கிறது. ஏதோ இருக்கை தொடங்க வேண்டும், அரசு நிதியை செலவழிக்க வேண்டும் என்றில்லாமல் பயன் தரும் விதத்தில் இவ்விருக்கை விளங்க வேண்டும்.

இந்த இருக்கையை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கிற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு நர்த்தகி நடராஜன் பேசினார்.

விஜயராகவன்

தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பழம்பெரும் திரைப்பட நடிகை குமாரி சச்சு அவர்கள் கலந்துகொண்டு பேருரை நிகழ்த்தினார். முனைவர் ரகுராம், பேராசிரியர் குத்தாலம் செல்வம், சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். பண்பலை தொகுப்பாளர் கோ.மணி அவர்களின் தொகுப்புரையுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, பரதநாட்டிய இசை கலை வளர் இருக்கை பொறுப்பாளர் ச. விஜயலட்சுமி பூபதி நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *