செய்திகள் நாடும் நடப்பும்

வங்கி சேவை தர வரும் புதுமுகங்கள்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பிக்க இருக்கும் 2021–க்கான மத்திய பட்ஜெட் தேதி நெருங்கி விட்டது.

கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டு ஏற்படுத்திய பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வுக்கான நிதிச் சலுகைகள், வரித் தள்ளுபடிகள் மற்றும் ஒத்திவைப்புகளால் மத்திய தொகுப்புக்கும் வருவாய் இழப்பு இருக்கும் நிலையில் எப்படி சமாளிப்பார்? என்ற கேள்விக்குறி பூதாகரமாக நம் கண்முன் எழுந்துள்ள நிலையில் வரும் காலங்களில் பொருளாதாரம் ஊக்கம் பெற புதுத் திட்டங்கள் உண்டா? என்ற ஆர்வக் கேள்வியும் எழுந்து வருகிறது.

குறிப்பாக நிதிச்சேவையின் முக்கிய அங்கமாக வங்கிகளின் சேவைகளை விரிவாக்க நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் ரிசர்வ் வங்கிகளின் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று தனியார் வங்கிகளின் உரிமையாளர்களுக்கான விதிமுறைகளை புதிய கோணத்தில் சிந்தித்து விவாதித்தது.

அதில் விவாதிக்கப்பட்ட ஓர் புதிய அம்சம் இத்துறையில் நுழைய விரும்பும் புதியவர்களுக்கும் வங்கிச்சேவை நடத்த அனுமதிப்பது பற்றி கருத்து பரிமாறிக் கொண்டுள்ளனர்.

மேலும் வங்கித்துறையில் புதிய வேகம் காண வணிக நிறுவனங்களோ, தொழில் நிறுவனமோ விரும்பினால் வங்கிகளை துவக்க அனுமதிக்கலாம் என்று பரிந்துரையும் செய்துள்ளது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949–ல் உரிய திருத்தங்களைச் செய்த பிறகே, வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பாளர்களாக அனுமதிக்க முடியும் என்றும் அந்தத் திருத்தங்கள் நிறுவனத்தின் பெயரில் கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அமையும் என்றும் ரிசர்வ் வங்கி கூறுவதை இந்தப் பொருளியல் வல்லுநர்கள் இருவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். என்றபோதும் வங்கிகளின் உரிமங்களுக்கான விதிமுறைகளைத் தளர்த்துவதால் விளையக்கூடிய ஆபத்துகளுக்கு எஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி ஆகியவற்றின் வீழ்ச்சியை உதாரணமாக காட்டுகிறார்கள்.

வங்கிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம், கண்காணிக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி பெற்றிருந்தபோதும் கூட எஸ் வங்கியின் சிக்கல்களை உரிய காலத்தில் கண்டறிவதற்கு அது தவறிவிட்டது.

வங்கிகளில் பாதுகாக்கப்படும் பொதுமக்களின் சேமிப்புகளை, தங்களது மலிவான முதலீடுகளாக பயன்படுத்திக் கொள்ள தொழில் நிறுவனங்களை அனுமதிப்பது பொருளாதார ஸ்திரத் தன்மைக்கு ஆபத்தாகவே முடியும். என்னதான் சட்டபூர்வமான ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுகிறபோதும் வங்கி உரிமையாளர்களுக்கான விதிமுறைகளை தளர்த்துவது அந்த ஆபத்தை நோக்கியே இட்டுச் செல்லும்.

பல தொழில் குழுமங்கள் பல்வேறு வங்கிகளிடமும் நிதி அமைப்புகளிடமும் கடன் பெற்று இருப்பதை அறிவோம். அவர்களின் கடன் சுமையை இவர்கள் துவக்கும் வங்கிகளே சுமந்து கொள்ள அனுமதித்தால் ஒரு நாள் அவர்களது தொழில்கள் சரிவு கண்டால் அந்த வங்கியின் நிலை என்னவாகும்? அதில் தங்களது சேமிப்பையும் வைத்து இருக்கும் வாடிக்கையாளர்களின் நிலை பரிதாபமாக இருக்குமே!

இதையெல்லாம் மனதில் கொண்டு பெரிய குழுமங்களின் நிதி திறனை கொண்டே வங்கிச் சேவைகளில் ஈடுபட அனுமதிக்க வேண்டும். சற்று சந்தேகம் இருந்தாலும் அந்நிறுவனத்தை வங்கிச் சேவைகளில் நுழைய அனுமதிக்க கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *