சினிமா செய்திகள்

நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் மனு

சென்னை, நவ. 6–

நடிகை நயன்தாரா நடித்து வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி சிறுபான்மை மக்கள் நலக்கட்சி சார்பில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் சாம் ஏதுதாஸ் டிஜிபியிடம் அளித்துள்ள புகார் மனு விவரம் வருமாறு:

‘‘நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி’ அம்மன் என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதனை தீபாவளியன்று ஓடிபி, ஹாட்ஸ்டார் போன்ற இணையதளங்களில் ரிலீஸ் செய்யவுள்ளனர். ஐசரி கணேசனின் ‘வேல்ஸ் பிலிம் இன்டர் நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பாலாஜி சரவணன், கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

இதில் சிறு பான்மையினர் குறித்து கேலியும், கிண்டலுமான வசனங்கள், படக்காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதைப்பார்த்த கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மிகவும் வேதனையும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். இதனை சிறுபான்மை மக்கள் நலக்கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறை இந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும். இந்த படம் ரிலீசானால் அமைதியான தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த படத்தை மறுதணிக்கை செய்து வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை நயன்தாரா, பாலாஜி சரவணன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்ட இவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *