செய்திகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்பட பல தொழில்களுக்கு தடை: தமிழக அரசு உத்தரவு

Spread the love

சென்னை, பிப்.25-

காவிரி டெல்டா பகுதியான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கியாஸ் உள்பட பல்வேறு தொழில்களுக்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசிதழில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகரின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்–1986 சட்டத்தின் அடிப்படையில் காவிரி டெல்டா பகுதிகளில் சில புதிய தொழில் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிடப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்க அரசியல் சாசனத்தின் 48-ஏ பிரிவு மாநில அரசுக்கு வழிவகை செய்கிறது. மேலும், மத்தியஅரசு சட்டத்தின்படியும் மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அரிசி களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி விளங்குகிறது. விவசாய மண்டலமான காவிரி டெல்டா பகுதி, எளிதில் பாழ்படக்கூடிய சுற்றுச்சூழல் கொண்ட பகுதியாக உள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வேளாண்மை மேம்பாட்டையும் அச்சுறுத்தும் வகையில், சில தொழிற்சாலைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளால் நிலத்தடி நீர், சரணாலயங்கள் மற்றும் பல்லுயிர் வாழ்க்கைக்கு சிதைவு ஏற்படுகிறது.

எந்தெந்த இடங்கள்?

இந்த நிலையில், டெல்டா பகுதியில் உள்ள வேளாண்மை நிலங்களை பாதுகாப்பதற்காக சமீபத்தில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்–2020 என்ற ஒரு சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, சில புதிய தொழில் திட்டங்களையும், புதிய தொழில் நடவடிக்கைகளையும் அந்த மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கொண்டுவர தடை செய்கிறது.

அதன்படி, டெல்டா பகுதிகளில் எந்தெந்த பகுதிகளில் எந்தெந்த தொழில்களை கொண்டுவரக்கூடாது என்பதற்கான இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரபாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் குமாராட்சி ஆகிய கோட்டங்கள்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் மற்றும் கரம்பக்குடி ஆகிய கோட்டங்களில் கீழே கூறப்பட்டுள்ள தொழில்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், துத்தநாகம் உருக்கு ஆலை, இரும்பு தாது கையாளும் ஆலை, ஒருங்கிணைந்த ஸ்டீல் ஆலை, ஸ்பாஞ்ச் இரும்பு ஆலை, தாமிர உருக்கு ஆலை, அலுமினியம் உருக்கு ஆலை, எலும்புத்தூள், விலங்குகள் கொம்புகள், குளம்புகள் சம்பந்தப்பட்ட தொழில்கள்,

தோல் தொழிற்சாலைகள், மீத்தேன், ஷேல் கியாஸ் மற்றும் அதுபோன்ற ஹைட்ரோ கார்பன் உள்பட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வு, துளையிடுதல், பிரித்தெடுத்தல் தொழில், கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *