செய்திகள்

விதிகளை பின்பற்றாத என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை:  அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை

Spread the love

சென்னை, பிப். 24–

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. விதிகளை பின்பற்றாத கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 557 பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்கள் இணைப்பு அந்தஸ்தை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னரே கல்லூரிகள் மாணவா் சோ்க்கையை நடத்த முடியும். அந்தவகையில் வரும் கல்வியாண்டுக்கான இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க கல்லூரிகள் பிப்ரவரி 21–ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியதாவது:–

பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெற மொத்தமுள்ள 557 கல்லூரிகளில் 537 மட்டுமே விண்ணப்பித்துள்ளன. பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் தொடர்ந்து சரிவதால் வரும் கல்வியாண்டில் 7 கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிடவும், 13 கல்லூரிகள் முழுமையாக மூடிக்கொள்ளவும் முன்வந்துள்ளன. மேலும், 2 கல்லூரி கள் மாணவர் சேர்க்கையை தொடருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதுதவிர சேர்க்கை இடங்களை பாதியாக குறைக்க 50 கல்லூரிகள் வரை விண்ணப்பித்துள்ளன. இதன் மூலம் வரும் கல்வியாண்டில் என்ஜினீயரிங் கலந்தாய்வில் சுமார் 8 ஆயிரம் இடங்கள் வரை குறைய வாய்ப்புள்ளது. இதையடுத்து விண்ணப்பித்த கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆய்வகம் போன்ற தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏஐசிடிஇ–யின் புதிய விதிகளின்படி நாக் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் 1:15 எனவும் இதர கல்லூரிகளில் 1:20 எனவும் ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் இருக்க வேண்டும். விதிகளை முறையாக பின்பற்றாத கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *