போஸ்டர் செய்தி

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Spread the love

புதுடெல்லி, நவ. 9

‘‘அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம். அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும், அதற்கு பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தர பிரதேச அரசும் வழங்க வேண்டும்’’ என சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் பற்றிய பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது. விசாரணை நடந்து கொண்டு இருந்த போதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.

சமரச முயற்சி தோல்வி

அந்த குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த குழுவின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றிய தகவல் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 6-ந் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. விசாரணையின் போது சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இதைத்தொடர்ந்து அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று இதுபற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க இருப்பதை யொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவ படை வீரர்கள் 4 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் காலை 10.30 மணியளவில் இருந்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இறுதி தீர்ப்பினை வாசித்தது. இதில், அயோத்தி வழக்கில் 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்குகிறோம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார். தொடர்ந்து, சன்னி பிரிவுக்கு எதிரான ஷியா வக்பு போர்டு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம்

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:–

* அயோத்தியில் ராமஜென்மபூமி பகுதியில் ராமர் கோயில் கட்ட அனுமதிக்கப்படுகிறது.

அதே சமயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் 2.77 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உரிய அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

* வக்ஃபு போர்டு ஏற்கும் இடத்தில், இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலம் மசூதி கட்ட ஒதுக்கப்பட வேண்டும்.

* இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டிக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும்.

சர்ச்சைக்குரி நிலத்தை 3 பிரிவாக்கியது தவறு

* அலகாபாத் உயர்நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றுப் பிரிவாகப் பிரித்துக் கொடுத்தது தவறு.

* நிலத்தின் உள்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியுள்ளனர். ஆனால் அதற்கு உரிமை கொண்டாட ஆதாரங்கள் இல்லை.

* 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்.

அயோத்தி: ராமர் பிறந்த இடம்

அயோத்திதான் ராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். நிர்மோகி அகாரா வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சர்ச்சைக்குரிய நிலத்துக்கு ஒட்டுமொத்தமாக சன்னி வஃபு வாரியம் உரிமை கோர முடியாது. 1857ஆம் ஆண்டுக்கு முன்புவரை இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள் பகுதியில் வழிபட தடையில்லை. வெறும் கட்டுமானம் இருக்கிறது என்பதற்காக மட்டும் அந்த இடத்தை சொந்தம் கொண்டாட முடியாது. பாபர் மசூதி பாபர் காலத்தில்தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆங்கிலேயேர்கள் வருவதற்கு முன்பே அயோத்தியில் ராமர் மற்றும் சீதாவை இந்துக்கள் வணங்கியதற்கு ஆதாரம் உள்ளது.

தொல்லியல் ஆய்வில் தகவல்

மசூதிக்கு கீழ் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று தொல்லியல் துறை ஆய்வில் தெரிவித்துள்ளது.

நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரித்து விட முடியாது. கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்துக்கு உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்கிற இந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்துக்கு உட்படுத்த முடியாது. நிலம் தொடர்பான தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை நிராகரித்து விட முடியாது. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன்பு அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய கட்டுமானம் அல்ல.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருந்தனர்.

தலைமை நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன் தீர்ப்பு

இதனிடையே, 3 பேர் அடங்கிய சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இம்மாதம் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே அதற்கு முன்னதாக இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதன்படி 5 நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

* * * 

‘ராமர் கோவிலுக்கு அனுமதியால் சமாதானம் அடைகிறோம்’

நிர்மோகி நிர்வாகி கருத்து

‘‘அயோத்தி வழக்கில் எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை. எனினும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதால் சமாதானம் அடைகிறோம்’’ என நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ் தெரிவித்துள்ளார்.

* * * 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *