சிறுகதை

மொய் தவிர்க்க வேண்டுகிறோம் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

கூடிக்கூடி எங்கள் அலுவலகத்தில் அனைவரும் பேசிக் கொண்டனர்.. எப்போதாவது ஒருமித்த முடிவு எடுக்க வேண்டிய சந்தர்பங்களில் மட்டுமே இப்படி பேசுவதுண்டு.

ஒரு “மன மகிழ் மன்றம்” எங்கள் அலுவலகத்தில் உண்டு.வருடா வருடம் அதற்கு தேர்தல் நடத்தி, அலுவலக சகாக்கள் பிரச்சினைகளை அலசு வதுண்டு.மைய அரசு அலுவலகம் , ஒரு சின்ன நாடக குழுவும் உண்டு.

அவ்வப்போது அலுவலக வளாகத்தில் ஓரங்க நாடகம் போடுவோம் அதில் விருப்பப் பட்டவர்களைக் கொண்டு.

தவிர அந்த மன்றத்துக்கு ஒரு தலைவர், பொதுச்செயலர், “இலக்கிய அணி செயலர்” எல்லாம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அனைத்து உறுப்பினர்களிடமும் மாதாமாதம் ஒரு சிறிய தொகை வசூலித்து “வார”, மாதமிரு, மாத இதழ்கள், பல எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு, புதினங்கள் வாங்கி உறுப்பினர்களிடையே சுற்றுக்கு விடுவோம்.

ஒரு அங்கத்தினர் ஏதாவது பிரச்சினையில் இருந்தால் அதை உடையவர்களிடம் பேசிக் களையவும் செய்வோம். சகாக்கள் வீட்டு விசேஷங்களான பெண் பிள்ளைகள் திருமணங்கள், காதுகுத்தல் புதுமனைப் புகுவிழா போன்ற விழாக்களுக்கும் சென்று “சிறப்பு” செய்வோம்.

எங்கள் இயக்குனர் மிகவும் நல்லவர், தான் ஒரு ஆபீசர்.. நீங்கள் எல்லாம் என் கீழ் வேலை செய்பவர்கள்..நான் சொல்வதை மட்டுமே நீங்கள் கேட்க வேண்டும். அதாவது சில ஆபீசர்கள் போல நான் சென்னதைச் செய் . நீங்கள் போகலாம் என்ற ஆணவ சுபாவம் உள்ளவர் அல்ல..

தன் சொந்த பணத்திலிருந்தும் ஒரு ஊழியருக்கு அரசு விதிகள் அனுமதிக்காத போது கொடுத்து உதவுவார்,பணத்தை திருப்பிக் கொடுக்காத போதும் கடிந்து கொள்ள மாட்டார்..

எதன்பொருட்டும், பைசா லஞ்சம்….ஊஹூம்..

அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளை உடனுக்குடன் முடித்து, தன் கீழ் வேலை செய்யும் ஊழியர் அந்த கோப்பை மேலே நகர்த்த வேண்டிய தருணத்தில், கீழ் மட்ட ஊழியர் வந்துதான் கோப்பை எடுத்து செல்ல வேண்டும், தன் உதவியாளருக்காக காத்திருக்காமல் (அது கணினி மயமாக்கப்படாத

கால கட்டம்), தானே அந்த ஊழியர் இருக்கைக்கு சென்று “நான் பார்த்துட்டேன்..இனி, நீங்க அடுத்த ஸ்டேஜுக்கு கோப்பினை

நகர்த்தலாம்” என்பார் ஒரு புன்னகையுடன்.

அந்த புன்னகையில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கும். அதாவது நீங்க எக்காரணம் கொண்டும் கோப்பை தாமதம் செய்யக் கூடாது என்று.

இப்படிப்பட்டவர் பெண்ணுக்கு கலியாணம் என்று அலுவலக சிப்பந்திகள் அனைவருக்குமே அவர் அழைப்பிதழை தானே வந்து கொடுத்தார். அத்துடன்

“நீங்க நிச்சயம் இந்த கலியாணத்து வரவேற்பு நிகழ்ச்சியிலும் மறுநாள் முகூர்த்தத்திலும் கலந்து கொள்ள வேண்டும்,”என்று கேட்டுக்கொண்டார்.

அங்குதான் எங்கள் பிரச்சினை ஆரம்பமாயிற்று.

ஒவ்வொரு மாதமும் உறவினர்கள், நண்பர்கள்,அலுவலக சகாக்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் ஏதாவதொரு சுப காரியம் நடப்பதும் அதற்கு எங்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதும் குறைந்த பட்சம் நூறு ரூபாயாவது மொய் எழுதிட மிடில் கிளாஸ் மாதவன்களான நாங்கள் படும் சிரமங்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதுதான்.

தவிர இந்த ஆபீசர் பெண் திருமணம் நடக்க இருப்பது மாதக் கடைசியில் பணம் புரட்ட என்ன செய்வதென்று போட்டு குழப்பிக் கொண்டோம்.

பல வி.வி.ஐபிக்கள், அரசின் உயர்மட்ட ஆபீசர்கள் கூட வருகை தர உள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் இருந்தது.

இதைத்தான் எங்கள் சகாக்கள் கூடிக்கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சகா சொன்னார்:

“இத பாருங்க ஃபிரண்ட்ஸ். இவர் அழைப்பிதழில் கொட்டை எழுத்துக்களில் “மொய் தவிர்க்க வேண்டுகிறோம்”னு எழுதிருக்கிறார்ல” என்ற போது இன்னொரு சகா,

“இதெல்லாம் வெற்று சம்பிராதாய வார்த்தைகள்..” என்றார்.

பிறகு எப்படியோ எங்கெங்கோ புரட்டி மொய் வைக்கப் போனபோது அந்த அதிகாரி எங்களைப் பார்த்து சீறினார்..

“என்னாச்சு சார்? நாங்க ஏதனாச்சும் தப்பு பண்ணிட்டோமா?” என்ற போது, “நீங்க எங்கூட எத்தனை வருடங்களா வேலை செய்யறீங்க?

ஆனா என்னை நீங்க உணரலை. நான் “மொய் தவிர்க்க வேண்டுகிறோம்னு” சம்பிரதாயத்துக்கு போடலை. நிசமாலுமே மொய் வேண்டாம்னு தான் போட்டிருக்கோம்.

என்னை பொறுத்தவரை ஒரு சுப நிகழ்ச்சிக்கு நிறைய பேர்களை அழைப்பது ஏன்னு உங்களுக்கு விளங்கலை போலும்.

வரவங்க, வயிறார சாப்பிட்டுட்டு மணமக்களை மனப்பூர்வமா வாழ்த்திட்டு போகணும். அந்த உளம் கனிந்த வாழ்த்துக்கள் “வது”க்களை

“வது” என்றால் மணமக்கள் (தஞ்சை மாவட்ட சொல்) நன்றாய் வாழ வைக்கும் என்பதால் தயவு பண்ணி என்னை மன்னிச்சுருங்க நான் இப்படி பேசறதுக்கு.

நீங்க இத்தனை பேர்கள் என் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து கலியாணத்துக்கு வந்ததற்கு அடியேனின் உளம் கனிந்த நன்றி,நன்றி” என்றவரை பார்க்கப் பார்க்க…… பிரமிப்பாய் இருந்தது……,

இந்தக் காலத்திலும் இப்படி ஒருவரா என்று நினைத்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *