செய்திகள்

சென்னையில் மாணவர்களை தகராறுக்கு இழுக்கும் வாட்ஸ் அப் ஆடியோவால் மீண்டும் பரபரப்பு

Spread the love

சென்னை, செப். 21–

‘‘சீனியரை அடிச்சிட்டாங்க, சண்டைக்கு தயாராகுங்கடா’’ என சென்னையில் கல்லூரி மாணவர்களை தகராறுக்கு இழுக்கும் வகையில் வாட்ஸ் அப் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியை தொடர்ந்து ‘‘ரூட் தல’’ மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அமைந்கரையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கையில் பட்டா கத்திகளுடன் எதிர்கோஷ்டி மாணவர்களை ஓடஓட விரட்டி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் வகையில் கமிஷனர் விஸ்வநாதன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். ரகளையில் ஈடுபடும் ரூட் தல மாணவர்கள் சுமார் 97 பேரை அடையாளம் கண்ட போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். அதை மீறி பஸ்களை அடித்து உடைத்து ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் இணைக்கமிஷனர் சுதாகர் எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடரந்து ‘‘ரூட் தல’’ மாணவர்கள் அடங்கி இருந்தனர்.

இதையடுத்து கடந்த 18ம் தேதியன்று சென்னை கடற்கரைரெயில் நிலையத்தில் மாநிலக்கல்லுாரி மாணவர்கள் மீண்டும் மோதிக் கொண்டனர். சென்னை மாநிலக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அரக்கோணத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், ராயபுரத்தைச் சேர்ந்த சீனியர் மாணவர்களுக்கும் இடையில் நடந்த இந்த மோதலில் ரெயில்கள் மீது கல்வீசி தாக்குல் நடத்தினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட மாநிலக்கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஹேம்நாத், தமிழ்செல்வன், வர்மன், தீனதயாளன் உள்பட 9 மாணவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அன்றைய தினம் மாநிலக்கல்லுாரி மாணவர்கள் வாட்ஸ்ஆப்பில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று நேற்று முதல் வைரலாக பரவி வருகிறது. அதில் பேசிய மாணவர்கள், ‘‘பர்ஸ்ட் இயர்னா பெரிய இவங்களாடா, நம்ம சீனியர் பசங்கள அடிச்சுட்டாங்கடா, எல்லாம் அக்கா கடை கிட்ட வாங்கடா, யாரும் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்காதீங்கடா, எல்லாம் வெளிய வாங்கடா, பர்ஸ்ட் இயர் வந்ததும் போட்டுத்தாக்கிரனும்டா, வாய்ஸ் மெசேஜ் கேட்டுட்டு யாரும் வரலன்னா எல்லாரையும் அசிங்கமா கேப்பன்டா’’ என மாணவர்கள் தங்களுக்குள் குரூப் தொடங்கி அதில் இது போல சக மாணவர்களை தகராறுக்கு அழைத்து ஆடியோ வெளியிட்டனர்.

இந்த ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கடற்கரை ரெயில் நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் வாட்ஸ்ஆப்பில் தங்களது வாட்ஸ் அப் குரூப்பில் இது போன்று பேசிக் கொண்டது தெரியவந்துள்ளது. அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லுாரிகளில் மாணவர்கள் யாரெல்லாம் வாட்ஸ்அப் குரூப் வைத்துள்ளனர் என்பது குறித்தும், கல்லூரி மாணவர்களின் ரூட்தலைகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *