செய்திகள்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்: 18 பேர் பலி

யாங்கோன், மார்.1–

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 18 பேர் உயிரிழந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

இரும்புக்கரம் கொண்டு…

மியான்மர் ராணுவம் இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.

முன்னதாக யாங்கோன் நகரில் நடந்த இந்த போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினார்கள். கலைந்து போகச் செய்ய வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் மறுக்கவே, போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது.

18 பேர் பலியானார்கள். 30–க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் என்று ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் குற்றஞ்சாட்டி உள்ளது.

அமெரிக்க தூதரகம் வேதனை

மியான்மரில் உயிரிழப்பு சம்பவம் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது என்று அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது. கனடா, இந்தோனேசியா தூதரகங்களும் ஆழ்ந்த வேதனையை வெளியிட்டுள்ளன.

ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருஅறிக்கையில், ‘மியான்மர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தேர்தல் மூலமே ஆட்சிக்கு வரவேண்டும். அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை ராணுவ ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு வர சர்வதேச சமூகம் ஒன்றிணைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தரப்பில், “மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை யாங்கூனில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தினர். இதில் போராட்டக்காரர்கள் ராணுவத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மியான்மரில் நடக்கும் போராட்டங்களைத் தடுக்கும் பொருட்டு ராணுவம் தரப்பில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ராணுவம், முன்பு கட்டுப்பாட்டைக் காட்டியது. ஆனால், அராஜக கும்பல்களைப் புறக்கணிக்க முடியவில்லை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தவிர்க்க முடியாமல் எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டு ஜெயில் எச்சரிக்கை

முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *