செய்திகள்

அசாம் சட்டசபை முதல்கட்ட தேர்தல்: 173 பேர் வேட்பு மனு தாக்கல்

கவுகாத்தி, மார்ச் 10–

அசாம் சட்டசபைக்கு மார்ச் 27–ந்தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27–ந்தேதி 47 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1–ந்தேதி 39 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6–ந்தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2–ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலேண்ட் மக்கள் முன்னணி, இடது சாரிகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாரதீய ஜனதா கூட்டணியில் அசோம் ஞான பரிஷத் கட்சி இடம்பெற்றுள்ளது. தற்போது அசாம் மாநிலத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் உள்ளார்.

மார்ச் 27–ந்தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் மொத்தம் 173 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் பாரதீய ஜனதா சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். மஜூலி தொகுதியில் போட்டியிடும் சர்பானந்த சோனாவால் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, முக்தார் அப்பாஸ் நக்வி, பிகார் அமைச்சர் சையது ஷானவாஸ் ஹூசைன் ஆகியோரும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

இவர்களுடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா கண்டு ஆகியோரும் பிரச்சாரம் செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *