செய்திகள்

வீடுகளுக்கு மின் இணைப்பு: மார்ச் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

Spread the love

சென்னை, பிப்.27-

வீடுகளுக்கு மின்சார இணைப்பு பெற மார்ச் 1-ந்தேதி முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்டு 10 நாட்களுக்குள் இணைப்பு வழங்கவும் மின்சார துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மின்சார இணைப்பு

தமிழகத்தில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விவசாயம், குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புகளை பெற பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உதவி-செயற்பொறியாளர் அலுவலகங்களில் எழுத்து பூர்வமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்று வருகின்றனர். அதுவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயித்துள்ள காலகெடுவுக்குள் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது. இதற்கிடையில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் www.tangedco.gov.in என்ற ஆன்லைன் முகவரிக்கு சென்றும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது வரும் மார்ச் 1ந்தேதி முதல் வீடுகளுக்கு மின்சார இணைப்பு தேவைப்பட்டால் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதுதொடர்பான உத்தரவு அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும் பணியை விரைவுபடுத்துவதற்காக விண்ணப்பங்களை வரும் மார்ச் 1ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுவும் மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி தங்களது தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன் உரிய ஆவணங்களுடன், உரிய கட்டணத்தை செலுத்தினால் 10 நாட்களுக்குள் இணைப்பு வழங்கப்படும். அலுவலகங்களுக்கு நேரடியாக வந்து விண்ணப்பிப்பதை விட பொதுமக்கள் ஆன்லைனில் எளிமையான முறையில் விண்ணப்பிக்க முடியும். இதனால் அலைச்சல் குறையும்.

தொழிற்சாலைகளுக்கு மின்சார இணைப்பும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்து உள்ளது. இந்த நடைமுறையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

மின்சார கட்டணத்தை கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் முறையும் அமலில் உள்ளது. இதற்காக அனைத்து மின்கட்டணம் செலுத்தும் மையங்களிலும் அதற்கான கருவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. ஆனால் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ரொக்கமாகவே மின்சார கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்தும் பொதுமக்களுக்கு உரிய வகையில் விழிப்புணர்வு அளிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையில் மின்சார வாரிய அதிகாரிகள் இறங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *