செய்திகள்

வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

டிசம்பர் 1–ந்தேதி முதல் 3–ந்தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்

சென்னை, நவ. 27–

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத்தலைவர் எஸ்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தென்கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 30ம் தேதி வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடலோரப் பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பதிவான மழை விவரம் வருமாறு:– சோளிங்கர் – 23 செ.மீ., வடபுதுப்பட்டு – 16 செ.மீ., பொன்னை அணைக்கட்டு, வேலூர்– 14 செ.மீ., ஆம்பூர், திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை – 13 செ.மீ., அலங்காயம், காட்பாடி – 12 செ.மீ., வாணியம்பாடி, திருபுவனம், காவேரிப்பாக்கம் – 9 செ.மீ., வாலாஜா, குடியாத்தம், விரிஞ்சிபுரம் – 8 செ.மீ., தேவகோட்டை, வெம்பாக்கம், மேலாலத்தூர் – 7 செ.மீ., திருமங்கலம், அதிராமப்பட்டினம், சிவகங்கை, ஆரணி, புதுக்கோட்டை – 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *