சென்னை, நவ.24
எல்ஐசி முகவர்களுக்கான சுயசார்பு புது வணிக செயலி “ஆனந்தா”, எல்ஐசி அருகில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்செயலி எல்ஐசியின் சேர்மன் எம்.ஆர். குமார், மேலாண்மை இயக்குனர் டி. சி. சுசீல்குமார், முகேஷ்குமார் குப்தா, ராஜ்குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார். இச்செயலி காகிதமில்லா முறையில் ஆயுள் காப்பீட்டு பாலிசியை முகவர், இதர விற்பனையாளர்கள் மூலம் பெறும் செயல்முறைக்கு உதவியாக இருக்கும். இச்செயலின் மூலம் ஆதார் எண்ணை ஆன்லைனில் பதிவேற்றி ஆயுள் காப்பீட்டு முன்மொழிவாளரின் காகிதமில்லா கேஒய்சி (நோ யுவர் கஸ்டமர் உங்கள் வாடிக்கையாளரை அறியவும்) பெறலாம்.
எல்ஐசி தனது தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, இச்செயலியை இந்திய ஆயுள் காப்பீட்டு துறையிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது. ஆயுள் காப்பீட்டுத் துறையில் உள்ள தற்போதைய போட்டிகளை சந்தித்து தங்கள் திறமையை மேம்படுத்தி, எல்ஐசி விற்பனையாளர்கள், விற்பனையை பல மடங்கு அதிகரிக்கும் வகையில் மிகச் சரியான சமயத்தில் இச்செயலி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
சமூக இடைவெளியை புதிய இயல்பாக நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் இக்காலகட்டத்தில், முகவர் / இதர விற்பனையாளர்களை நேரில் சந்திக்காமலேயே வீடு / அலுவலகத்தில் இருந்து கொண்டே சுலபமாக புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசியை பெறுவதற்கு இச்செயலி வசதியாக இருக்கும் என்றார் சேர்மன் எம் ஆர் குமார்.
இச்செயலியை அறிமுகப்படு த்தும்போதே, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆயுள் காப்பீட்டு பாலிசி பெறுவதற்கான செயல்முறை போன்றவற்றை விளக்கும் முகவர்களுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனை அதிகாரிகள் மற்றும் முகவர்களுக்கு இடையே இச்செயலின் அறிமுகம் மிகப்பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. இச்செயலி மூலம் காகிதமில்லா முறையில் முதல் ஆயுள் காப்பீட்டு பாலிசி சேர்மன் எம். ஆர். குமார் வழங்கினார். இதைத்தொடர்ந்து மண்டல அலுவலகங்களிலும் வழங்கப்பட்டது.
இச்செயலி எல்ஐசியின் பாலிசிகளை பெருமளவு விற்பனை செய்வதில் உதவி செய்து முகவர்களின் கனவுகளை நனவாக்குவதில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றார் எம்.ஆர்.குமார்.
மேலும் இது பற்றி அறிய www.licindia.in வலைதளத்தை பார்க்கலாம்.