செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழுவுக்கு அதிக அளவில் கடன் வழங்கியது அம்மா அரசு

திருச்சி, டிச.31

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (31 ந் தேதி) திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது மணிகண்டம் ஒன்றியத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசியதாவது: –

புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற போது, பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி, பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதற்காக சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கினார். அதன் அடிப்படையிலே அம்மாவினுடைய அரசும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தேவையான அளவு வங்கி இணைப்புக் கடன் வழங்கி வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் நான் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆலோசனை நடத்தினேன்.

அப்போது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களையும் அழைத்து பேசி, அவர்களிடத்திலேயும் ஆலோசனைகளைப் பெற்றோம். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய ஒரே அரசு அம்மாவின் அரசு தான். நான் திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது சுய உதவிக்குழு நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். அதன் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆக அரசு எந்த அளவிற்கு சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அம்மாவின் அரசு இந்த மணிகண்டம் ஒன்றியத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தொகுதி. அம்மாவின் தொகுதியாக இந்த தொகுதி அப்போது இருந்தது. இந்த தொகுதியில் வெற்றி பெற்று அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, இந்த தொகுதி மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி இருக்கின்றார்.

7 கல்லூரிகள்

அரசு தோட்டகலை மகளிர் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தேசிய சட்டப்பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ இப்படி பல கல்லூரிகளை தந்து இந்த மணிகண்டம் ஒன்றியம் மட்டுமல்ல, ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வழி வகை செய்தவர் அம்மா. தமிழ்நாட்டிலேயே இந்த ஒரு ஒன்றியத்தில் மட்டும் தான் அரசின் சார்பாக ஏழு கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலே ஸ்ரீரங்கம் தொகுதிதான் முதன்மை தொகுதியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அம்மா உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அறிவித்தார். அம்மா வழியில் நடைபெறும் இந்த அரசு மகளிருக்கு இருசக்கர வாகனம் வழங்க ரூ.25000 மானியம் வழங்கி அதனை செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய குடும்பத்திலே பெண்கள் திருமண வயதை அடைகின்ற போது, பொருளாதார சூழ்நிலையின் காரணமாக, திருமணம் தடைபெறுகிறது. அதனை உணர்ந்த அம்மா ஏழை, எளிய பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

சாதனைகள்

அதே போல ஏழை எளிய கர்ப்பிணித்தாய்மார்களுக்கு மகப்பேறு காலத்தில் ஆரோக்கியமாக இருப்பதற்காக நிதி உதவியினை ரூ.6000 ஆக அறிவித்து, அதனை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி, தற்போது ரூ.18 ஆயிரமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பிறக்கின்ற குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகத்தையும் அம்மா வழங்கினார். தற்பொழுது அம்மா மினி கிளினிக்கை நாங்கள் அறிவித்து திறந்து வைத்திருக்கின்றோம்.

அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் பயன் பெறும் வகையில், அம்மாவின் அரசு விலையில்லா சீருடை, காலணிகள், புத்தகங்கள், புத்தகப்பை, கணித உபகரணப்பெட்டி, விலையில்ல மிதிவண்டி, விஞ்ஞான கல்வி கற்க விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இது வரை 52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்ல மடிகணினி வழங்கப்பட்டுள்ளது.

அதே போன்று அரசு பள்ளியில் பயிலும் ஏழை, எளிய மணவர்களின் மருத்துவ படிப்பு கனவினை நனவாக்கும் வகையில் இந்த அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதன் மூலம் 313 அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் பயிலவும், 92 மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவம் பயிலவும் வழிவகை செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது, இதன் மூலம் 1650 புதிய மருத்துவ படிப்பு உருவக்கப்பட்டுள்ளது. இதனால், உள் ஒதுக்கீட்டின் மூலம் கூடுதலாக 130 மருத்துவ படிப்புக்கான இடங்கள் கிடைக்க உள்ளது. இதனால், அடுத்தாண்டு முதல் 443 பேருக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்த அரசு அம்மாவின் அரசு.

கொரோனா காலத்திலும் மகளிர் சுய உதவிக்குழுவினர் சோர்வடைய கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவும் வங்கி இணைப்புக் கடன் வழங்கி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மேலும் செம்மைப்படுத்தப்பட்டது. அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் விளங்கிக்கொண்டிருக்கிறது.

அதிக வங்கி கடன்

இந்தியாவிலேயே மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிகமான வங்கி இணைப்புக் கடன் வழங்கிய ஒரே மாநிலம் தமிழகம் தான். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் உங்களுடைய பங்களிப்பு மிக மிக முக்கியம். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள். சாதனை படைக்கக்கூடிய சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அண்ணா தி.மு.கவிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையில், தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையான உதவி செய்ய வேண்டும்.

எங்கள் வேட்பாளரை பெருவாரி யான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அண்ணா தி.மு.க. அரசுதான் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு துணை நிற்கும். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கக்கூடிய அரசு, அண்ணா தி.மு.க அரசு. அப்படிப்பட்ட அம்மாவுடைய அரசு தொடர்வதற்கு உங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்கிட வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *