நாடும் நடப்பும்

டிரம்புக்கு கொரோனா தொற்று: சீனாவுக்கு புதுத் தலைவலி

உலகின் அதிசக்தி வாய்ந்த தலைவராக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு விட்டனர்.

சீனா தான் இந்த கொடூர வைரஸ் பரவலுக்கு உண்மையான காரணம் என்று கூறிவந்த டிரம்புக்கு அக்டோபர் 1 இரவு அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. அந்த நாள் சீன தேசிய தினமாகும்!

தற்போது சீனா முழுவதும் முன்குளிர் அறுவடை கால கொண்டாட்டங்கள் காரணமாக விடுமுறையில் இருப்பதால் நாடு முழுவதும் மக்கள் பல்வேறு விடுமுறை ஸ்தலங்களுக்கு படை எடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விடுபட்டு வரும் சீனாவில் பல மாதங்களுக்குப் பிறகு மக்கள் நடமாட்டமும் கோலாகல குதூகலமும் தென்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சீனர்கள் மீது அவதூறு பேசி வந்த டிரம்புக்கும் கொரோனா வைரஸ் தொற்று என்ற செய்தியை சமூக வலைதளங்கள் கேலி செய்த வண்ணம் இருந்தது. ஆனால் சில மணி நேரங்களிலேயே அந்நாட்டு சுய கட்டுப்பாட்டு சட்ட திட்டத்தின்படி சென்சார் செய்யப்பட்டு விட்டது.

டிரம்பின் மிகப்பெரிய தலைவலி 30 நாட்களில் அதாவது நவம்பர் 3 அன்று சந்திக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலாகும். தற்போது டிரம்புக்கு ஆக்சிஜன் கூட தேவைப்படவில்லை. ராணுவ மருத்துவமனையில் தீவிர உயர்சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏதேனும் தடுப்பு மருந்து, விசேஷ மருந்துகள் தரப்படுகிறதா? என்ற ஆவல் உலகெங்கும் இருப்பதால் பல்வேறு கிசுகிசுக்கள் பரப்பப்பட்டும் வருகிறது.

பெரிய தலைவர்கள் இப்படி கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நீண்ட பட்டியலில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பிரதமர் போரீஸ் ஜான்சன், கனடா பிரதமர் டிரோடியோவின் மனைவி சோபியா, ரஷ்ய பிரதமர் மிகேல் மிசுடின், நம்நாட்டில் உள்துறை அமைச்சர் அமீத்ஷா என்ற பெரிய பட்டியலில் டிரம்பும் வந்துள்ளார்.

டிரம்பின் தேர்தல் பிரச்சாரப் பணிகள் தடைபடுமா? என்ற கேள்விக்கு நிச்சயம் ஓரளவு பாதித்தாலும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே ராணுவ மருத்துவமனையில் இருந்து பிரச்சாரத்தை டிஜிட்டல் முறையில் துவக்கி விட்டார்.

அடுத்த சில நாட்களில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பிடனுடன் நேருக்கு நேர் விவாதிக்கும் நிகழ்வில் தான் நேரடியாக பங்கேற்க முடியாது. ஆனால் மருத்துவ வசதியை பெற்று வந்தாலும் வீடியோ நிகழ்வில் மோதுவேன் என்று உறுதியாக கூறியுள்ளார்.

இப்படி பாதிப்படைந்து இருக்கும் டிரம்ப் குணமடைந்து வீட்டுக்கு திரும்பும் நாளில் சீனாவில் இருந்தும் பல உலக நாடுகளிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். அதை டிரம்பும் அறிவார்.

சீன வெளியுறவு துறை அமைச்சகமும் அமெரிக்காவில் உள்ள தூதரும் டிரம்புக்கு தங்களது அனுதாபங்களை கூறிவிட்டு பூரண குணமடைந்து நல்லமுறையில் வீடு திரும்பவேண்டும் என்று ஒரு அனுதாப செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தனது நிலைக்கு குறிப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்தாக வேண்டிய கட்டத்தில் சீனாவின் சதியால் தனக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு காரணம் சீனா தான் என்று கூறி வந்தவர் அடுத்து என்ன செய்வாரோ? என்ற அச்சக் கேள்வியும் சீன மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவதும் புரிகிறது.

தற்போது உலக வர்த்தகத்திலும் வளர்ச்சி குறியீடுகளும் படு பாதாளத்தை நோக்கி வீழ்ச்சியடைந்து வருகையில் டிரம்பின் உடல்நிலை பின்னடைவு மீண்டும் உச்சக்கட்ட பதட்டத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விட்டது.

குறிப்பாக ஆசிய – பசுபிக் பகுதி நாடுகளின் எல்லைகளுக்கு மதிப்பு தர மறுத்து வரும் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் ஏற்படும் போது எல்லாம் அமெரிக்காவின் உதவியையே நம்பி இருக்கின்றனர்.

ஆனால் அமெரிக்காவிலோ ஜனாதிபதி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் உலக அரசியல் விவகாரங்களில் உடனடி தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுப்பதில் தயக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் டிரம்பின் சமீப டுவிட்டர் பதிவுகள் அவர் முக்கிய முடிவுகள் எடுப்பதில் மெத்தனத்தை காட்டமாட்டார் என்றே தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *