உலகப்புகழ் ‘டெலிவரி’ நிறுவனமான அமேசான் புதுப்புது எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனம் என்பது அதன் சிறப்பாகும். அமேசானில் ஒரு பொருளை வாங்கும்போது விலை, தரம் முதலியவற்றை பார்த்து வாங்க முடிகிறது.
அதே வரிசையில் தங்களது தயாரிப்புகளையும் விற்பதால் அவர்களும் கடும் போட்டியை சந்தித்தாக வேண்டும். அதை சமாளிக்கும் விதத்தில் நல்ல தரமான கணினி யுக சாதனங்களை வடிவமைத்து விற்பனையிலும் சாதித்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் அவர்களது தயாரிப்புகளில் விற்பனைப் பட்டியலில் முன்னணியில் இருப்பது டிவியில் ஸ்ட்ரீமிங் வசதியை தரும் ‘பையர்’ டிவி ஸ்டிக், (Fire TV Stick) என்ற கருவியாகும். இந்த சாதனத்தை அமேசான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்க உள்ளது.இதற்கென சென்னையில் உள்ள ‘ஃபாக்ஸ்கான்’ நிறுவனத்தின் துணை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் தயாரிப்புத் தொடங்கும் என்றும் இந்திய வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான ‘பையர் டிவி ஸ்டிக்’ தயாரிக்கப்படும் என்றும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே அமேசான் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும் முதல் தயாரிப்பு ஆகும்.
சென்னையில் உற்பத்திப்பிரிவு அமைக்கப்படுவதை வரவேற்றுள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அமேசானின்இந்தத் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் பெருகும் என்று கூறினார்.
இந்தியாவில் உள்ள 1 கோடி சிறு, நடுத்தர தொழில்களை இணையவழித் தொழிலாக மாற்ற அமேசான் நிறுவனம் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சென்ற வருடம் உறுதி அளித்தது.
அதன்மூலம் 10 பில்லியன் டாலர் ஏற்றுமதிக்கான வாய்ப்புஅமையும். மேலும் 2025-க்குள் கூடுதல 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் ‘இந்தியாவிலேயே தயாரிப்பு’ என்று அழைப்புக்கு காரணம் அதிகரித்துவரும் வெளிநாட்டு கருவிகள் மீதான மோகம் என்பதால் அது போன்ற நவீன கருவிகளை நம் நாட்டில் தயாரிக்க வைக்கவே புதிய தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு விசேஷ அழைப்பு கொடுத்தார்.
அதன் பயனாக பல பன்னாட்டு நிறுவனங்கள் நமது மண்ணில் தயாரிக்க முன்வந்தனர். சீனாவிலும் இந்தோனேசியா, தென் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு குறிப்பாக அமெரிக்க தொழில் நிபுணர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பல்வேறு சலுகைகள் தந்து கவர்ந்து இழுத்து வருவதை அறிவோம்.
2019–ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மேற்கொண்ட துபாய், இங்கிலாந்து, அமெரிக்க பயணத்தால் பல தொழில் அதிபர்கள் தமிழகத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு தொழில் துவங்க ஆர்வம் காட்டியது தமிழ் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்க டானிக்காக இருந்தது.
அந்த வகையில் அமேசான் தங்களது பிரபல கருவியை தமிழகத்தில் துவக்க முன்வந்திருப்பது உலகப்பார்வை தமிழகத்தின் மீது திரும்பி இருப்பதை உறுதிப்படுத்துகிறது.