விழுப்புரம், ஜன. 13–
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் 10-ஆவது மாதமாக, பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக கெண்டாடப்படுகிறது. இதில் உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தக் கோயிலில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு தளர்வுகளை நீக்கியதன் காரணமாக பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. எனினும், அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் மட்டும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை அம்மன் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இரவு 7 மணியளவில் கோயில் வளாகத்தில் ஆகம விதிப்படி ஊஞ்சல் உற்சவம் 10வது மாதமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெற்றது. ஊஞ்சலில் அங்காளம்மனை அமரவைத்து கோயில் பூசாரிகள் அம்மன் தாலாட்டுப் பாடலைப் பாடினர். இந்த உற்சவம் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.