செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் பக்தர்கள் இன்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

விழுப்புரம், அக்.17–

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு 7–வது மாதமாக ஊடரங்கு காரணமாக பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம் கோயில் ஆகமவிதிகளின்படி நேற்று இரவு நடைபெற்றது.

மாதந்தோறும் அமாவாசை அன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24–ம் தேதி முதல் பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது, இதனை தொடர்ந்து பேருந்து உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், கோயில்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன் படிப்படியாக பொது முடக்கத்தில் தளர்வை தமிக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்தது. இதனால் கடந்த 2 மாதமாக மேல்மலையனூர் கோயிலில் விழாக்கள் இன்றி அம்மன் வழிபாடு மட்டும் நடைபெற்றது.

இந்நிலையில் புரட்டாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு கோயில் வளாகத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும் சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிப்பட்டு சிறப்பு அலங்காரத்தில்இரவு 7 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மகா தீபாராதனை யுடன் உற்சவம் முடிவடைந்தது. இதில் மேல்மலையனூர் உதவி ஆணையர் ராமு, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சரவணன், அறங்காவலர்கள் செந்தில்குமார், தேவராஜ், ராமலிங்கம், செல்வம், வடிவேல், சந்தானம், மேலாளர் மணி மற்றும் கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொது முடக்கம் காரணமாக இந்த நிகழ்வில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *