செய்திகள்

ஜூன் 23–ம் தேதி அமர்நாத் யாத்திரை துவக்கம்

Spread the love

புதுடெல்லி, பிப்.15–

தெற்கு காஷ்மீரின், இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை வரும் ஜூன் 23–ம் தேதி தொடங்க உள்ளதாக கோயில் சந்நிதி வாரியம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 40 தினங்கள் நடைபெற்ற இந்த யாத்திரை, இந்த ஆண்டு 42 தினங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக முன்கூட்டியே யாத்திரையை முடித்துக் கொண்டு காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு யாத்ரீகர்களை ஜம்மு–காஷ்மீர் மாநில அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 2–ம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவு பெற்றது.

ஆகஸ்ட் 5–ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவிப்பதற்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு இந்த யாத்திரையை ரத்து செய்தது நினைவு கூறத்தக்கது.

யாத்திரை குறித்து அமர்நாத் சந்நிதியின் (எஸ்ஏஎஸ்பி) தலைமை நிர்வாக அதிகாரி விபுல் பதக் கூறியதாவது:–

‘ஹிந்து நாள்காட்டியின் அறிவிப்புப்படி ஜகந்நாத் ரத யாத்திரையின் புனித நாளான வரும் ஜூன் 23–ம் தேதி முதல் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித ரத யாத்திரை தொடங்குகிறது. மொத்தம் 42 நாள் நடைபெறும் இந்த யாத்திரை ஆகஸ்ட் 3–ம் தேதி ரக்ஷபந்தன் அன்று நிறைவடைகிறது’ என்றார்.

இந்த யாத்திரைக்கான பதிவு ஏப்ரல் 1–ம் தேதி ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுனர் ஜி.சி.முர்மு தலைமையில் தொடங்கும்.

யாத்திரையின்போது, 13 வயதுக்குக் குறைவான மற்றும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். யாத்திரையின் வழித்தடங்கள் மற்றும் முகாம்களில் நெகிழி பயன்பாடு இல்லாததை உறுதி செய்வதற்கான வழிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *