சினிமா செய்திகள் முழு தகவல்

ஆல் ரவுண்டர்; ஜென்டில் மேன்; அவரைப் புடிக்காம இருக்க முடியாது!

பொன்மனச் செல்வன், காவியத் தலைவனான கதை

ஆல் ரவுண்டர்; ஜென்டில் மேன்; அவரைப் புடிக்காம இருக்க முடியாது! – ஏவிஎம் சரவணன்

‘தாயுள்ளம்’, 1952ல் வந்தது. இந்தப் படத்துல ஆர்.எஸ். மனோகர் ஹீரோவா பண்ணியிருந்தார் . ஜெமினி கணேசன் வில்லனா பண்ணியிருந்தார். இந்தப்படத்தை அப்பா பார்த்தார், ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஜெமினியோட நடிப்பு.

பையன் பிரமாதமா வருவான், அப்படிங்கற நம்பிக்கைலே மனசாரப் பாராட்டி அவரை ஏவிஎம் பேனர்ல பெண் படத்துல ஹீரோவா ‘புக்’ பண்ணினார்.

3 மொழியில் இந்தப் படத்தை எடுத்தார். தமிழ், தெலுங்கு, இந்தி. தமிழ்ல ஜெமினி கணேசன், தெலுங்குல என்டி ராமராவ், இந்தில பரத் பூஷன் நடிச்சாங்க.

ஒரே நேரத்திலே மூணு மொழியிலேயும் படப்பிடிப்பு நடந்தது. முதல்ல தமிழ்ல ஜெமினி கணேசன் நடிச்ச சீனை எடுப்போம். அப்புறம் அதே சீனுக்கு என்.டி. ராமராவை நடிக்க வச்சு எடுப்போம். மூணாவதா இந்தி பரத் பூஷனை நடிக்க வைச்சு எடுப்போம். இப்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களுக்கும் ஷூட்டிங் நடந்துச்சு. அதனால படம் எடுத்து முடிக்கிறதுக்கு ரொம்ப நாள் தாமதமாச்சு.

இதனால எங்க படம் ரிலீசும் தள்ளிப் போச்சு. ஆனா அதுக்குள்ள, அதே வருஷம் (1953) அவர் 2 வேஷத்துல நடிச்சிருந்த ‘மனம் போல மாங்கல்யம்’ படம் ரிலீசாச்சு. படம் பிரமாதமா ஓடிச்சு. அவரோட கலை வாழ்க்கைல ஒரு திருப்புமுனைன்னு சொல்லணும்.

எங்க படம் முன்னாடி வந்துருந்துதுன்னா, நான் ஏவிஎம் ஜெமினின்னு பெருமையா, சொல்லிக்கிட்டிருப்பேன்னு சந்தோஷமா சொன்னார்.

பெண் படத்துக்குப் பிறகு ஒரு பெரிய ‘கேப்’ (இடைவெளி). அதுக்கப்புறமாத்தான் நாங்க அவரை ‘களத்தூர் கண்ணம்மா’ படத்துல புக் பண்ணினோம். இதுவும் பிரமாதமாப் போச்சு. அதேநேரம் தமிழ்ல கொடிகட்டிப் பறந்திட்டிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் இவுங்க 2 பேருக்கும் நடுவுல சமமான ஒரு நடிகரா இவரும் கொடி கட்ட ஆரம்பிச்சார்.

நாகிரெட்டியார் ‘மிஸ்ஸியம்மா’ன்னு எடுத்திருந்த ஒரு படத்தோட ‘ரைட்ஸ்சை’ நாங்க வாங்கியிருந்தோம். இதிலே மீனாகுமாரி ஹீரோயின். தங்கவேலு ரோல்ல கிஷோர் குமார் நடிச்சிருந்தார். சொபிஸ்டிகேட்டட் கேரெக்டர் ஹீரோவுக்கு அது மாதிரி ரோலுக்கு அப்ப யாருமே இல்லேங்கற நெலமை வந்தப்போ, இந்திலேயும் ஜெமினிகணேசனை போட்டோம். படம் சூப்பர் ஹிட். அதுக்குள்ள சக்சஸ்புல் ஹீரோவா ஒரு ரவுண்டு வர ஆரம்பிச்சார் ஜெமினி.

அதுக்கப்புறம் நடுவுல கொஞ்சம் பிரேக் ஆச்சு அவருக்கு. நடிக்க வேலையில்லாப் போச்சேங்கற சூழ்நிலையில கொடைக்கானல்ல போய் தங்கியிருந்தாரு கொஞ்ச நாள். மறுபடியும் சென்னை திரும்பினவுடனே டிஸ்டரிப்யூஷன் ஆபீஸ்ல என்னை வந்து பார்த்தார்.

‘‘சரவணா… இப்ப படம் எடுக்கற. படத்துல என்னைக் கூப்பிட்டு ஏன் என்னை நடிக்க வெக்கல்லே..?’’ னு கேட்டாரு. அப்போ நான் சிரிச்சுக்கிட்டே ‘இல்ல… சாதாரண அப் கமிங் ஆர்டிஸ்ட்டைத் தான் போட்டுக்கறோம். அவங்களை வெச்சுத்தான் இப்போ படம் எடுத்துட்டு வர்ரோம். சொல்லனும்னா ரவிச்சந்திரனை புக் பண்ணிருக்கோம். அதே கண்கள் படம். அவருக்கு மொத்த சம்பளமே ரூ. 10 ஆயிரம் தான். அதேபோல ஜெய்சங்கரை புக் பண்ணிருக்கோம். படம்: குழந்தையும் தெய்வமும். அவரோட சம்பளமே ரூ.12 ஆயிரம் தான். நீங்கள்லாம் வளந்துட்டீங்க. ஒங்களுக்கு நாங்க தர்ற சம்பளம் கட்டுப்படியாகாது. அப்படீனு சொன்னேன்.

குடுக்கறதை குடு; நானும் நடிக்கிறேன்

அடுத்த நிமிஷம் ஜெமினி, சட்டுன்னு சொன்ன வார்த்தை ‘சரி நானும் நீங்க குடுக்கறதை வாங்கிக்கறேன். நடிக்கிறேன். நீங்க குடுக்கறதை குடுங்க சரவணன்னார். அதிர்ந்து போய்ட்டேன்.

அப்படி அவர் சொன்னதைக் கேட்டு நாங்க ‘புக்’ பண்ணின படம் தான் ராமு.

மனைவியை இழந்த ஹீரோ. விடோ கேரெக்டர். நடுத்தர வயசுன்னு கதையைச் சொன்னோம். கேட்டார். ஒத்துக்கிட்டார்.

அட்வான்ஸ் செவ்வாய்க்கிழமை தர்றேன். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள். எனக்கும் ராசியான நாள். தரட்டுமா… இல்ல, மறுநாள் புதன் கிழமை குடுக்கட்டுமான்னு கேட்டேன். ஆனா ஜெமினியோ ‘நீ சொன்னா. ஒனக்கு புடிச்ச நாள் செவ்வாய்க்கிழமைன்னு. வந்துட்டேன். அட்வான்ஸ் பணத்தைக் குடு வாங்கிக்கறேன்னார். ராகுகாலமாச்சே இப்பவா…ன்னு கேட்டேன். அதுக்கு அவர் சிரிச்சுக்கிட்டே, ‘சரவணா… பணம் வர்ற நேரம் எல்லாமே நல்ல நேரந்தான் புரிஞ்சுக்கோ…’ன்னு சொல்லிட்டே குடுத்த அட்வான்ஸ் பணத்தை வாங்கிக்கிட்டார்.

ராமுல நாங்க புக் பண்ணினப் பிறகு அவரைப் பார்க்கணுமே, வரிசையா 8 படம் புக் ஆச்சு, ஹிட் படமாச்சு (சரஸ்வதி சபம் உள்பட).

களத்தூர் கண்ணம்மா தெலுங்குலயும் எடுத்தோம். அதுலேயும் சூப்பர் ஹிட்டாச்சு.

செட்டுக்குள்ள அவர் வந்தா… நுழையறபோதே லைட்மேன் தோள்ல கைபோட்டுட்டே பேசுவார்.

வாய் நெறைய ‘ஹலோ பிரதர்’தான்…

ஹலோ பிரதர்னு அவர் எல்லாரையும் வாய் நெறைய கூப்பிடுவார்.

நடிகர்கள் பின்னாடி உட்கார்ந்து, டிரைவர் ஓட்டி வர்ற காலத்துல, தானே பியட் காரை ஸ்டைலா ஓட்டிட்டு வருவாரு. சொபிஸ்டிக்கேட்டட் ஆர்டிஸ்ட். ஆல் இந்தியால இது மாதிரி ஒரு ஆர்டிஸ்ட்டைட் பார்க்க முடியாது. ஆல் ரவுண்டர். ஜென்டில்மேன். எல்லார்க்கிட்டேயும் பிரியமா இருப்பார். ஒரு தடவை பார்த்தா கிட்டே போய் பேசணும்னு சொல்ல வைக்கிற பர்சனாலிட்டி, எல்லாரையும் அவருக்குப் பிடிக்கும். எல்லாருக்குமே அவரை பிடிக்கும்.

ஜெமினிங்கற பேர்ல விக்ரம்மை வெச்சு படம் எடுத்தோம் ஜெமினின்னு வெச்ச பேருக்காவது ஜெமினியை ஒரு சீன்ல ஒரு நிமிஷமாச்சும் காட்டணும்னு நெனைச்சோம். போய் சொன்னோம். அந்த ஒரு நிமிஷத்துக்கும் வந்து நடிச்சாரே… ஜெமினி Guestஆ..

Gemini, really an unique Personality!

எழுத்து, தொகுப்பு: வீ. ராம்ஜீ

மேலும் படிக்க….

கண்களில் மட்டுமே காதலை காட்டி கண்ணியம் காத்தவர்

‘காதல் மன்னன்’: பிளாஸ்பேக்!

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *