செய்திகள் முழு தகவல்

“கோயபல்ஸ்” ரஜினி, கமல்: பொன்னையன் விமர்சனம்

* தாயின் மடியில் “பட்டினி” என்ற பயிற்சி வகுப்பில் “வறுமை” என்னும் பாடம் படித்தவர் புரட்சித்தலைவர்

* எதிரிகள் ஆசி கேட்டாலும் மனசார ‘வாழ்க’ என்று வாழ்த்திய பொன்மனச் செம்மல்

எம்ஜிஆரின் உள்ளம் எங்கே? உணர்வு எங்கே? மக்கள் நலக் கொள்கை எங்கே? கோட்பாடுகள் எங்கே?

மதுவிலக்கு ஏன் ரத்து? விடுதலைப்புலிகளுக்கு ஏன் ஆதரவு? பார்வையின் மறுபக்கம் எம்.ஜி.ஆர்.

“நாடோடி மன்னன்” தமிழ் சினிமா உலகை புரட்டிப்போட்ட படம். பிற்காலத்தில் தமிழக அரசியலையும் கூட…

“நீங்கள் மாளிகையில் நின்று மக்களைப் பார்க்கிறீர்கள்; நான் மக்களோடு நின்று மாளிகையைப் பார்க்கிறேன்’’

என்னும் வசனம் எம்ஜிஆரின் வாழ்க்கையானது.

சென்னையில் நடந்த நாடோடி மன்னன் வெற்றி விழாவில் பங்கேற்ற அறிஞர் அண்ணா ‘புரட்சி நடிகரைப் பாராட்டுவது தன்னைப் பாராட்டுவது போன்றது’ என்றார்.

“மரத்தில் பழுத்த கனி தங்கள் மடியில் விழாதா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, நல்ல வேளையாக அந்தக் கனி என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக் கொண்டேன்”

என்றார். அன்று முதல் இன்று வரை ஏழைகளின் “இதயக்கனி” யானார் எம்ஜிஆர்.

அரசியல் புதுமுகங்கள் எல்லாம் தங்கள் முகவரியாக எம்ஜிஆரை வரித்துக்கொள்வதே இதற்கு உதாரணம்.

அண்ணா திமுகவின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 33ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, “மக்கள் குரல்” நாளிதழுக்காக, முன்னாள் அமைச்சர் பொன்னையன் எம்ஜிஆருடனான தனது நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“எம்ஜிஆர் நடிகர் அரசியல் தலைவர்”; நீங்கள் எதனால் ஈர்க்கப்பட்டீர்கள்?

திராவிட இயக்கத்தின் கொள்கை பரப்பு பிரச்சார பீரங்கி எம்ஜிஆர். திராவிட இயக்க கொள்கைகள் என்ன என்பதை மக்களுக்கு தெரிவித்தவர் அண்ணாவின் கொள்கைகளை மக்கள் மத்தியில் ஆழ பதித்தவர்.

எம்ஜிஆர், திராவிட பேரியக்கத்தின் கொள்கை பிழம்பாக அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட காரணத்தினால் பலரும் எம்ஜிஆர் மீது ஈர்ப்பு சக்தியை ஏற்படுத்திக்கொண்டார்கள். கொள்கைத் தங்கமாக, அண்ணாவின் வாரிசாக இருந்த காரணத்தினால் நாங்கள் எம்ஜிஆரை பின்பற்றினோம். அவர் முதல்வராக வந்த நாளில் இருந்து அவரது மறைவு காலம் வரை அவருடன் அமைச்சராக செயல்படும் வாய்ப்பை பெற்றவன் நான்.

ஆட்சியை தன்னால் நடத்த முடியும் என எம்ஜிஆருக்கு நம்பிக்கை கொடுத்த அடித்தளம்…

1977ல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம். லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையாளர் கோட்டையிலே எம்ஜிஆரை பேட்டி கண்டார். அப்போது அவர், ‘‘முதலமைச்சர் அவர்களே, “நீங்கள் பள்ளிக்கூடம் செல்லாதவர், படிக்காதவர் என்று சொல்கிறார்கள், ஏழ்மை நிறைந்த தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற 60 சதவீத மக்களின் பிரச்சினைகளை, படிக்காத உங்களால் எப்படி தீர்க்க முடியும்?” என்று கேட்டார்.

‘‘உண்மைதான். நான் படிக்காதவன், பள்ளி, கல்லூரி சென்று முறையே கல்வி கற்காதவன். ஆனால், வறுமை என்ற பள்ளிக்கூடத்தில் என் தாயின் மடியிலே “பட்டினி” என்ற பயிற்சி வகுப்பிலே, “வறுமை” என்ற பாடத்தை படித்தேன். வறுமை என்றால் என்ன, அதன் சிரமங்கள் என்ன என்பதை அறிந்தவன். அந்த வறுமையைப் போக்குவதற்கு எனக்கு சிந்தனை உண்டு. செயல் திறன் உண்டு. வறுமை என்ற பொருளாதார படிப்பே எனக்கு போதுமான படிப்பு. அதை வைத்து ஏழைகளின் வறுமையை போக்க முடியும் என்று சொன்னார்.

மது வாடையே ஆகாத எம்ஜிஆர் மதுவிலக்கை ஏன் ரத்து செய்தார்?

தன்னை வாட்டி வதைத்த வறுமை ஏழைகளின் இல்லத்தில் இருக்கிறதை கண்டு வேதனையடைந்த எம்ஜிஆர், ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடன் ஏழை குழந்தைகளுக்கு மூன்று வேளையும் இலவச உணவு தர வேண்டும் என்று சொன்னார். ஆனால் எங்களிடம் நிதியில்லை. மத்திய அரசை கேட்டார். மத்திய அரசு கைவிரித்து விட்டது.

இதற்கிடையில், அரசு அதிகாரிகள், குடிகாரர்களின் உயிரைப் பறிக்க கூடிய அளவுக்கு கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. அதனை முறைப்படுத்துவதற்கு மதுவிலக்கை நிபந்தனைகளுடன் தளர்த்தி அரசுக்கு வருவாய் ஈட்டலாம் என்று ஆலோசனை கூறினர்.

மண்ணிலேயே மதுப்பழக்கம் இருக்க கூடாது என்ற கொள்கை கொண்ட எம்ஜிஆர், இதன் மூலம் வரும் பணத்தை வைத்து ஏழைகளுக்கு உணவு கொடுக்கலாம் என்று எண்ணி, விருப்பம் இல்லாமல் மதுவிலக்கை ரத்து செய்தார்.

ஏழைகளிடத்தில் அவர் காட்டும் பரிவு பற்றி…

அந்தக்காலத்தில் சுற்றுப்பயணங்கள் என்றால் காலை 6 மணிக்கு ஆரம்பித்து அடுத்த நாள் விடியற்காலை 6 மணிக்குத்தான் முடியும். ஆங்காங்கே பொதுமக்கள் மனுக்கள் தருவார்கள்.

அப்போது எம்ஜிஆரிடம், அய்யா சைக்கிளில் டபுள்ஸ் போனேன், லைட் இல்லாமல் போனேன்; போலீஸ்காரங்க பிடிச்சுக்கிட்டாங்க; ஃபைன் போடறாங்க; சைக்கிளை பிடுங்கி வச்சுக்கிட்டாங்க; ஏழைகள் நாங்கள் என்ன செய்வோம் என்று புலம்பினார்கள்.

இந்த துயரத்துக்கு விடிவுகாலம் தருகிறேன் என்று சொன்ன எம்ஜிஆர், சைக்கிளில் டபுள்ஸ் போகலாம். லைட் இல்லாமல் போகலாம். அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை என்று முதல்வராக ஆட்சியில் அமர்ந்தவுடன் அறிவித்தார்.

இது, இப்போது சாதாரண விஷயமாக தோன்றும். அன்று சைக்கிள் ஒன்றே வாகனம் என்று இருந்த காலம். எம்ஜிஆரின் இந்த அறிவிப்பு ஏழை மக்களின் வயிற்றில் பாலை வார்த்தது.

கிராம சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது பற்றி…

எம்ஜிஆர் எங்கு சென்றாலும் உடன் செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கிராமங்கள் வழியாக செல்லும் போது, தாய்மார்கள் தங்கள் தலைமீது கூடைகளை வைத்துக்கொண்டு காய்கறிகள், பால் போன்றவற்றை சுமந்து செல்வதை எம்ஜிஆர் கவனித்தார். தொலைதூரம் நடக்கிறார்களே… இதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டார்.

சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து கிராம இணைப்பு சாலைகள் போடப்பட வில்லை. அருகில் இருக்கும் நகரங்களுக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல கிராம சாலைகளை போட வேண்டும். அதில் சிற்றுந்துகளை இயக்க வேண்டும். அப்போது கிராமப்புறத்தில் இருந்து விளைப்பொருட்களை நகர்புறத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். அதன் வழியாக அவர்களது வாழ்வாதாரம் செழிக்கும் என்று சொன்னேன்.

இதனை செயல்படுத்த ஆட்சிக்கு வந்தபின் என்னை போக்குவரத்துத் துறைக்கும், நெடுஞ்சாலைத்துறைக்கும் அமைச்சராக்கி தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிராமப்புற இணைப்பு சாலைகளை அமைத்து, கிராமப்புற சிற்றுந்துகளையும் இயக்கினார்.

இந்தியாவில் முதன் முதலாக கிராமப்புறத்துக்கு பேருந்துகளை இயக்கிய பெருமையும், கிராமப்புற இணைப்பு சாலைகளை அளவு கடந்து உருவாக்கிய பெருமையும் எம்ஜிஆரையே சாரும்.

எம்.ஜி.ஆரின் தன்னிறைவு திட்டம் பற்றி…

இந்தியாவில் தமிழகத்தில் தான் முதன் முறையாக தன்னிறைவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிகாலை நேரத்தில் காரில் நாங்கள் போகும்போது, காரின் வெளிச்சம் பட்டவுடன், சாலையோர புதர்களுக்குள் இருந்து பெண்கள் எழுந்து ஓடுவார்கள். கழிப்பறை இல்லாத காரணத்தால் இத்தகைய இன்னல்களை கிராமப்புற பெண்கள் சந்திக்கிறார்கள் என்பதை எம்ஜிஆர் உணர்ந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு பரிகாரம் தேட வேண்டும் என்று சொன்னார். கிராமங்கள் தோறும் தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகளை எம்ஜிஆர் கட்டிக்கொடுத்தார். முன்னாள் பிரதமர் சரண்சிங் நாடாளுமன்றத்தில் இதை பாராட்டி பேசினார்.

ஈழ போராளிகளுடனான அவரது நட்பு பற்றி…

எல்டிடிஈ பிரபாகரனுக்கும், பிளாட் அமைப்பின் தலைவர் முகுந்தன் என்ற உமாமகேஸ்வரனுக்கும் பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

எம்ஜிஆர், சனிக்கிழமைதோறும் சிறைக்கு சென்று குற்றவாளிகள் யார்? ஏன் குற்றம் செய்தார்கள்? எதற்கு தண்டனை கிடைத்தது? என விசாரிப்பார்.

நீதிமன்றத்தில் சாட்சியங்களின் அடிப்படையில் பல நேரங்களில் குற்றவாளிகள் தப்பிவிடுவதும், நிரபராதிகள் சிறையில் இருப்பதும் பல சந்தர்ப்பங்களில் மனுக்கள் மூலமாக அவரது கவனத்துக்கு வந்தது. இவை உண்மையா? என விசாரிக்க சனிக்கிழமைதோறும் சிறைக்கு வருவார்.

அப்போது சிறைக்கைதிகளாக பிரபாகரனும், முகுந்தனும் அங்கிருந்தனர். இரண்டு பேரையும் எம்ஜிஆர் தனித்தனியாக சந்தித்து பேசினார்.

இலங்கையில் சிங்கள வெறியர்களால் தமிழ்ப்பெண்கள் பலாத்காரம் செய்து கொலை செய்வதை ஆதாரத்துடன் அவர் அறிந்தார்.

ஈழத்தில் வாழும் தாய்மார்களின் கற்பு சூறையாடப்படுவதை தடுக்க வேண்டும் என்று எம்ஜிஆர் எண்ணினார். அதற்காக இந்திராகாந்தியை சந்தித்தார். அப்போது ஈழ போராளி பிரதிநிதிகளையும் அழைத்துச்சென்றார்.

தமிழ்ப்பெண்களை மானபங்கம் செய்யும் சிங்களர்களை சுட்டு வீழ்த்த ஈழ போராளிகளுக்கு “ஏகே 47” துப்பாக்கிகளை கொடுத்து, தமிழ கத்தில் பயிற்சி அளித்து உதவினார்.

இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இந்திராகாந்தியிடம் எம்ஜிஆர் வேண்டி கேட்டுக்கொண்டார்.

எம்ஜிஆர் ஆட்சியை கலைத்ததற்கான காரணம்?

1980ல் எம்ஜிஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கான ஒரு காரணத்தை கூட இந்திராகாந்தியால் சொல்லமுடியவில்லை. காரணம், இந்திராகாந்தி நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சாவூரில் போட்டியிட விரும்பினார்.

அப்போது அறுவடை காலம். சாலையில் நெற் கதிர் அடித்துக்கொண்டிருந்த நேரம்.

அப்போது அரசியல் சூழ்நிலை சரியில்லை. அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இந்திராகாந்தி வாகனம் போகும்போது அந்த நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அவரை காப்பாற்ற கூடிய வழிவகை இல்லாமல் போய்விடும். எனவே தஞ்சாவூரில் நிற்க வேண்டாம்; மதுரையில் போட்டியிடுங்கள் என்று சொன்னோம். அதில் சற்றே அவர் கோபித்துக் கொண்டார். இந்திராகாந்திக்கு சிலர் துர்போதனைகளை தந்தார்கள். அதற்கு பின் வந்த சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆரை அமோக வெற்றியுடன் ஆட்சிக்கட்டிலில் தமிழக மக்கள் அமர வைத்தார்கள்.

எம்ஜிஆர் கையெழுத்திட்ட முதல் கோப்பு?

எம்ஜிஆர் முதல்வராக பொறுப்பேற்றவுடன் அவருக்கு வந்த முதல்கோப்பு நெய்வேலியில் பீங்கான் தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டும் என்று தான் இருந்தது.

சேஷசாயி நிறுவனம் 51 சதவீதம், அரசு 49 சதவீத பங்கு என்ற அடிப்படையில் அந்த நிறுவனம் துவங்குவதாக இருந்தது.

அமைச்சரவையில் எம்ஜிஆர் பேசும்போது, பசி பட்டினியுடன் ஏழைகள் ஏராளம் இருக்கும் போது அவர்களது பசியைப்போக்கும் திட்டம் ஏதேனும் ஒன்றை கொண்டு வாருங்கள், அதில் நான் கையெழுத்துப்போடுகிறேன் என்றார்.

செல்வசெழிப்போடு இருக்கிற சேஷசாயி போன்ற நிறுவனங்களுக்கு அரசு பணத்தை கொடுத்து மென்மேலும் அவர்களை செல்வம் குவிக்க நான் கையெழுத்து போடமாட்டேன் என நிராகரித்தார்.

‘‘திராவிட இயக்க உணர்வுகளுக்கு கிஞ்சித்தும் சொந்தம் இல்லாத இருவரை மக்கள் என்றுமே ஏற்க மாட்டார்கள்’’

ரஜினியும், கமலும் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என்கிறார்களே…?

எம்ஜிஆர் ஆட்சியை ஜெயலலிதா நிலைநாட்டினார். இந்த இருவரது ஆட்சியை வெற்றிகரமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிலைநாட்டினார்.

ஜெயலலிதா எம்ஜிஆருடன் நடித்த காலம் முதலே திராவிட இயக்கத்திலே அரசியல் பாடம் படித்தார்.

எம்ஜிஆருடன் ரஜினியோ, கமலோ உறவாக ஒருகாலத்திலும் இருந்தது கிடையாது. கோயபல்ஸ் பேசுவதை போல நான் எம்ஜிஆருக்கு வேண்டியவன் என்று ரஜினியும், கமலும் பேசி, அரசியல் ஞானம் படைத்த விழிப்புணர்வு மிக்க தமிழக மக்களை எந்த காலத்திலும் ஏமாற்ற முடியாது.

எதிரிகளே ஆசி கேட்டாலும் வாழ்க என்று தான் எம்ஜிஆர் சொல்வார். அரசியலே தெரியாத, திராவிட இயக்க உணர்வுகளுக்கு கிஞ்சித்தும் சொந்தமில்லாத ரஜினியும், கமலும் எம்ஜிஆரின் பெயரை பயன்படுத்துவது உண்மைக்கு புறம்பான கோயபல்ஸ் தத்துவம் என்று சோசியல் மீடியாக்கள் பறைசாற்றுவதை பார்த்து ரஜினியும், கமலும் தலைகுனிய வேண்டும்.

தமிழ் உணர்வும், திராவிட உணர்வும் அறவே இல்லாத ரஜினியும் கமலும் சுயநலத்திற்காக பேசுகிற பொய்மைகளை தமிழக மக்கள் என்றும் ஏற்கமாட்டார்கள்.

எம்ஜிஆரின் உள்ளம் எங்கே; உணர்வு எங்கே? கொள்கை எங்கே. ரஜினி, கமல் கொள்கை எங்கே? என பொதுமக்கள் கேட்கும் கேள்விக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஷீலாபாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *