எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் விவசாயிகள் நலன் காக்கும் அ.தி.மு.க.
தமிழக விவசாயிகளின் கேடயம் அண்ணா திமுக என்பதை யாரும் மறுக்கவே முடியாது! முன்பு எம்ஜிஆர், அவர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் நலன் காக்க எடுத்த சீரிய முயற்சிகள் நாடே பார்த்து வியக்க வைத்தது.
இரவிலும் அதிகாலையிலும் விவசாயிகள் மோட்டார் பம்ப் செட்டுகளை இயக்கினால் அதற்கான மின்சாரம் முற்றிலும் இலவசம் என்று 1983–ல் அறிவித்தார். அப்போது ஒரு எச்.பி. குதிரை விசைத்திறன் கொண்ட பம்ப் செட்டுகளே அதிகமாக உபயோகத்தில் இருந்ததால் கிட்டத்தட்ட தமிழக விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தினால் பயன்பெற முடிந்தது.
பிறகு எம்ஜிஆர் வழியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து தமிழக விவசாயிகளின் நலன் காத்தார்.
குறிப்பாக பருவ மழை தவறினாலோ, புயல் மழையால் பாதிப்படைந்தாலோ உடனடி நிவாரணம் தரும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அதற்காக காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்தினார்.
விவசாயிகளுக்கு பாதகமாக செயல்பட்ட திமுக அரசாட்சியின் போது தினம் ஒரு போராட்டம் என்று களமிறங்கினார். அச்சமயத்தில் விவசாயிகளின் நலன் மீது அக்கறை கொண்டு பல்வேறு அநீதிகளை தட்டிக் கேட்டார்.
மேலும் மிக ஏழை விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழிகள் தந்து வாழ்வாதாரத்தையும் வழங்கினார். பலருக்கு இலவசமாக பயிர் நிலங்களையும் வழங்கினார். ஜெயலலிதா தேர்தலில் நின்ற போதெல்லாம் தமிழகமே ஜெயலலிதாவை விவசாயிகளின் நண்பன் என்று கூறிட தவறாத அவர், நண்பனின் சங்கடங்களையும் அவர் கூறி, வேறு கோரிக்கையை முன் வைக்கும் முன்பே அவரே பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்தார்.
மேலும் ஆண்டுக்கு ஆண்டு பொங்கல் நேரத்தில் விவசாயக் குடும்பங்கள் மகிழ்ச்சிகரமாக கொண்டாட ஏதுவாக இலவசமாக புத்தாடைகள் வழங்கியும் வந்தார்கள்.
இப்படியாக எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக விவசாயிகளின் வாழ்க்கையில் நம்பிக்கை தரும் வகையில் பல்வேறு புதுப்புது திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
அந்த வழியில் அண்ணா தி.மு.க. தலைவன் சொல்லே வேத வாக்காக எடுத்து ஜெயலலிதாவின் வழியில் இன்றைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விசேஷ கவனம் செலுத்தி வருவதை பார்த்து வருகிறோம்!
அவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாய் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தற்போதைய தமிழக அரசு பயிர்க்கடன் தள்ளுபடியை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெறப்பட்ட நகைக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“கூட்டுறவு வங்கிகளில், பயிர்க் கடன் பெற்ற, 16.43 லட்சம் விவசாயிகளின், கடன் நிலுவைத் தொகையான ரூ.12 ஆயிரத்து 110 கோடியே 74 லட்சம் தள்ளுபடி செய்யப்படும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 5–ந் தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதைச் செயல்படுத்தும் விதமாக பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை 8ந் தேதி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ‘கூட்டுறவு பொது நகைக் கடன்கள் 1.4.2020 முதல் 31.12.2022 வரை மற்றும் 1.4.2020 முதல் 31.1.2021 தேதி வரை பொது நகைக் கடன்கள், 31.12.2020 மற்றும் 31.1.2021 தேதி வரையிலான நகைக் கடன் நிலுவை விவரங்களை பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் பயிர்க்கடன்களைத் தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் பெற்ற நகைக் கடன்களும் தள்ளுபடி என்ற அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூட்டுறவுத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இப்படியாக கொரோனா பெரும்தொற்றின் பிடியிலும் புயல் வெள்ளத்திலும் அதீத மழைப் பொழிவு காரணமாகவும் தவித்துக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் நலன் மீது அக்கறை கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உழைக்கும் ஏழை விவசாயிகள் நலன் காக்க சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
எதைச் செய்தாலும் அது உடனுக்குடன் செய்தாகவேண்டும்; குறிப்பாக ஏழை விவசாயிகள் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதில் அண்ணா திமுக அரசு இன்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
கடன் ரத்து செய்த அரசாணையை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி சமீபத்தில் பொது நிகழ்வில் உரையாற்றிய போது கடன் தள்ளுபடி செய்துவிட்ட ரசீதை 10 நாட்களில் தர உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் உறுதியான தலைமையில் வெற்றிநடைபோடும் அண்ணா திமுக அரசை வாழ்த்தி வரவேற்போம்.