செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.8.36 கோடியில் 486 வேளாண் யந்திரங்கள் கொள்முதல்

திருவள்ளூர், ஜன.24–

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கூட்டுப் பண்ணைய திட்டம் மூலம் ரூ.8.36 கோடியில் 486 வேளாண் யந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருவதாக கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் வேளாணண்மைத்துறை சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள் மற்றும் வேளாண் யந்திரங்கள் விற்பனையாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:–

மாவட்டத்தில் கூட்டு பண்ணையத் திட்டம் கடந்த 2017–18ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 166 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைத்து, அரசு நிதியாக ரூ. 8.30 கோடி வழங்கப்பட்டு, அதன் மூலம் டிராக்டர் – 97, பவர் டில்லர் – 56, ரோட்டவேட்டர் – 141, பிரஷ் கட்டர் – 13, வைக்கோல் கட்டும் கருவி – 6, விசை தெளிப்பான் – 19, இதர வேளாண் யந்திரங்கள் – 115 என 486 வேளாண் யந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இத்திட்டம் மூலம் விவசாயிகள் கூட்டுப் பண்ணைய முறையில் விவசாயம் செய்து, கடன் வசதி, இடுபொருள்களை கூட்டு கொள்முதல் செய்து லாபம் ஈட்டலாம். புதிய தொழில் நுட்பங்களைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி பயிர் சாகுபடி செய்யலாம் என கூறினார்.

இக்கூட்டத்தில் இணைஇயக்குநர் (வேளாண்மை) சம்பத்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எபினேசர், துணை இயக்குநர் பாண்டியன், செயற்பொறியாளர் சமுத்திரன், துணை இயக்குநர் ஜெபகுமாரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *