போஸ்டர் செய்தி

ரூ.134 கோடி மதிப்பீட்டில் வேளாண் கட்டிடங்கள்: எடப்பாடி திறந்தார்

Spread the love

சென்னை, செப்.20–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 19 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை ஆகியவற்றை தலைமை கழகத்தில் நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 114 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டடங்கள், 5 சேமிப்பு கிடங்குகள் மற்றும் ரப்பர் தாள் உலர்ப்பான் அறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வேளாண்மை சார்ந்த மனிதவளத்தைப் பெருக்கி, வேளாண்மை உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரித்தல், தரமான வேளாண்மைக் கல்வியை அளித்தல், வேளாண்மை ஆய்வுகளில் முன்னோக்கி திட்டமிடுதல், உழவர்களுக்கும், வேளாண்மை அலுவலர்களுக்கும் தீவிர விரிவாக்கக் கல்வி மற்றும் பயிற்சிகள் மூலம் புத்தெழுச்சியை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலமாக செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரையில் அமைந்துள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 19 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மாணவர்கள் படிப்பு மையம்

மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டம், வாழவச்சனூரில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் விரிவுரை அரங்கம் மற்றும் ஆய்வகம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 14 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் படிப்பு மையங்கள்; தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவர் விடுதிக் கட்டடம்; புதுக்கோட்டை மாவட்டம், வம்பனில் உள்ள தேசிய பயறு ஆராய்ச்சி மையத்தில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் படிப்பு மையம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் உள்ள மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பண்ணை மேலாளர் அலுவலகத்துடன் கூடிய வகுப்பறை மற்றும் பரிசோதனை கட்டமைப்புகள்;

தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் மூலமாக நபார்டு வங்கியின் நிதியுதவியுடன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் – லால்குடி, மண்ணச்சநல்லூர், பி.கே. அகரம், எம். புத்தூர், அரசலூர், பிடாரமங்கலம், துறையூர், தெற்கு உப்பிலியாபுரம், தாத்தயங்கார்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 31 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், எடைமேடைகள், குளிர்பதன கிடங்குகள், விவசாயிகளுக்கான சேவை மையம், வாகனங்கள் நிறுத்துமிடம்;

அலுவலக கட்டடங்கள்

தூத்துக்குடி மாவட்டம் – ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம், புதூர் ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 10 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், ஏல அறைகள், விவசாயிகளுக்கான பயிற்சி நிலையம், எடைமேடைகள், விவசாயிகளுக்கான சேவை மையங்கள்;

திருநெல்வேலி மாவட்டம் – இராமையன்பட்டி, வள்ளியூர், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையங்களில் 23 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள், ஏல அறைகள், விவசாயிகளுக்கான சேவை மையங்கள், கடைகள், எடைமேடைகள், குளிர்பதன கிடங்குகள்;

சேமிப்பு கிடங்குகள்

வேளாண் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைத்திட நபார்டு வங்கியின் கிடங்கு உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் மூலம், திருவண்ணாமலை மாவட்டம் – போளூர் மற்றும் ஆரணி ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 8 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 7000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்; காஞ்சிபுரம் மாவட்டம் – காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 4000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 சேமிப்பு கிடங்குகள்; தூத்துக்குடி மாவட்டம் – தூத்துக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 1 சேமிப்பு கிடங்கு;

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கன்னியாகுமரி விற்பனைக்குழு நிதி மூலம் 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரப்பர் தாள் உலர்ப்பான் அறை;

என மொத்தம் 133 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்

கே. ராஜூ, வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, வருவாய், பேரிடர் மேலண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் எஸ்.ஜே.சிரு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் என். குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *