செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை மகத்தான வெற்றி பெறும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தி.மு.க. ஆட்சி கனவு பலிக்காது

சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை மகத்தான வெற்றி பெறும்:

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை, டிச.10-–

சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் ஆட்சி கனவு கானல்நீராகத் தான் இருக்கும். தி.மு.க.வோடு ஒப்பிடும்போது 100 மதிப்பெண்ணை எடுத்தது அண்ணா தி.மு.க. ஆட்சி தான். தி.மு.க. தோல்வி அடைந்த கட்சி. அதை எப்படி மக்கள் அங்கீகரிப்பார்கள். நிச்சயமாக 2021 சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை மகத்தான வெற்றியை பெறும்.

அரசு பணியில் தமிழ் வழியில் படித்து வருபவர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. வரை தகுதிகொண்ட பணிகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி. வரையிலும், பிளஸ்-2 வரை தகுதிகொண்ட பணிகளுக்கு பிளஸ்-2 வரையிலும், பட்டப்படிப்பு வரை தகுதிகொண்ட பணிகளுக்கு பட்டப்படிப்பு வரையிலும், முதுநிலை படிப்பு வரை தகுதிகொண்ட பணிகளுக்கு முதுநிலை படிப்பு வரையிலும் தமிழில் படித்து இருக்க வேண்டும்.

எம்.ஜி.ஆரின் எண்ணமும், கொள்கையும் தி.மு.க. தமிழ்நாட்டில் தலைதூக்க கூடாது என்பது தான். அதற்காகவே அவர் ஒரு கட்சியை ஆரம்பித்து அதில் வெற்றிக்கண்டு 10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை தந்தார். எம்.ஜி.ஆரின் ஆட்சி, கொள்கை, லட்சியத்தை சொல்வதற்கும், கடைப்பிடிப்பதற்கும் எங்களுக்கு தான் உரிமை உண்டு. எம்.ஜி.ஆரை இரவல் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் கட்சியில் தலைவர்களே இல்லை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எம்.ஜி.ஆரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்கின்ற, அவருடைய ஆட்சியை ஏற்படுத்துகின்ற ஒரே கட்சி அண்ணா தி.மு.க. மட்டும் தான். அண்ணா தி.மு.க.வுக்கு தான் அந்த உரிமை இருக்கிறது. அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆரின் குழந்தை. அவருடைய பெயரை உச்சரிக்கிற உரிமை வேறு யாருக்கும் கிடையாது.

2ஜி வழக்கு இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் இருக்கிறது. உப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பது போல, தவறு செய்தவன் ஜெயிலுக்கு போவது உறுதி. இது சட்டத்தின் நியதி. ஆ.ராசா ஒரு வக்கீல். வக்கீல் ஜோதியிடம், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா வாதாட தயாரா?. மேடை உள்பட அனைத்து செலவுகளையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். முதலில் அவர் கேட்கும் கேள்விக்கு ஆ.ராசா பதில் சொல்லட்டும். அதன்பிறகு நாங்கள் நேரடியாக வாதிக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *