செய்திகள்

தேர்தல் கூட்டணி: அமைச்சர்கள் குழுவுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை

சென்னை, பிப்.3–

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழுவுடன் பாமக இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

பசுமை வழிச்சாலையில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி இல்லத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி சண்முகம் மற்றும் பாமக சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டுமல்லாமல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்றதாக தெரிகிறது. பிப்ரவரி 14ம் தேதி பிரதமர் தமிழகம் வருவதால், அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

ஏற்கனவே சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு, 20 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கடந்த மாதம் 11–ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, 2019–ம் ஆண்டு நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் அண்ணா திமுக உடன் கூட்டணி சேர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அண்ணா திமுக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.ம.க தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியது.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த 11–ந் தேதி பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசை அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது பா.ம.க. தரப்பில் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இன்று அமைச்சர்கள் குழுவுடன் பா.ம.க. பேச்சுவார்த்தை நடத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *