செய்திகள்

அண்ணா தி.மு.க. –தே.மு.தி.க. இடையே இன்று பேச்சு

சென்னை, மார்ச் 2–

அண்ணா தி.மு.க. – தே.மு.தி.க. கட்சிகள் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 2011–-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, அண்ணா தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. 41 இடங்களில் போட்டியிட்டு, 29 இடங்களில் வெற்றி பெற்றது. எதிர்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்த தே.மு.தி.க. 7.9 சதவீத வாக்குகளையும் கைப்பற்றியது.

ஆனால், 2016–-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, தமிழகத்தில் 3-வது அணியாக உருவெடுத்த மக்கள் நலக்கூட்டணிக்கு தே.மு.தி.க. தலைமை தாங்கியது. 104 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் இறக்கிய தே.மு.தி.க. ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க., தனது கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், 27-ந்தேதி இரவு அண்ணா தி.மு.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் சந்தித்து பேசினார்கள்.

28–-ந்தேதி இரவு மின்துறை அமைச்சர் தங்கமணியை அவரது இல்லத்தில், தே.மு.தி.க. அவைத் தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதால் அதிகமான தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனால், அண்ணா தி.மு.க. தரப்பில் 14 இடங்கள் மட்டுமே தரப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் சென்னையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அண்ணா திமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் அண்ணா திமுக – – தேமுதிக கட்சிகள் இடையே தொகுதி எண்ணிக்கை தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மாலை மீண்டும் ஆலோசனை நடைபெற உள்ளது. அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *