செய்திகள்

தொகுதி பங்கீடு: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை

தலைமை கழகத்தில் தேர்தல் பணிகள் குறித்து எடப்பாடி – ஓ.பி.எஸ். ஆலோசனை

தொகுதி பங்கீடு: பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை

நள்ளிரவு வரை நடந்தது

சென்னை, மார்.1–-

அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6–-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அண்ணா தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பாரதீய ஜனதா, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் முதல் அண்ணா திமு.க. தொடங்கியது.

பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள்

பா.ம.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதீய ஜனதா, தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா தொகுதி பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி மற்றும் தலைவர்கள் ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பாரதீய ஜனதா குழுவினர் நேற்று காலை சந்தித்து பேசினர்.

இதற்கிடையே, நேற்று இரவு காரைக்கால், விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது பாரதீய ஜனதா தரப்பில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி, பாரதீய ஜனதா பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அண்ணா தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு 1 மணி வரை நடந்தது.

தலைமை கழகத்தில் ஆலோசனை

இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அண்ணா திமுக தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இதில், அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி எம்.பி., ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் காலை 10.15 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற்றது. பின்னர் அனைவரும் எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்றனர்.

மூவேந்தர் முன்னணிக் கழகத்துடன் பேச்சுவார்த்தை

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணா தி.மு.க. தேர்தல் பணி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. டாக்டர் சேதுராமனுடன் அ.இ.மூ.மு.க. பொதுச்செயலாளர் எஸ்.ஆர். தேவர், இணைப்பொது செயலாளர் இரா.பிரபு, மாநில இளைஞர் அணி செயலாளர் பி.பெரியதுரை ஆகியோர் உடன் பங்கேற்றனர்.

20 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பொதுச்செயலாளர் எஸ்.ஆர். தேவர் தெரிவித்ததாவது:– அண்ணா தி.மு.க. தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் நீடிக்கிறது. நாங்கள் 3 தொகுதிகள் கேட்டு உள்ளோம். இரு தினங்களில் எங்கள் கட்சிக்கு தொகுதி எது என தெரிவிப்பதாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தெரிவித்தனர். நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தரான் போட்டியிட உள்ளோம்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *