செய்திகள்

அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்: எடப்பாடி அறிவிப்பு

மீண்டும் அண்ணா தி.மு.க. ஆட்சி அமையும்

அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்: எடப்பாடி அறிவிப்பு

பிரதமரின் முயற்சிகளுக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும்

சென்னை, நவ. 22–

அண்ணா தி.மு.க. – பாரதீய ஜனதா கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னையை அடுத்த தேர்வாய்கண்டிகை பகுதியில் ரூ.380 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவும், மெட்ரோ ரெயில் 2வது திட்டம் உள்பட ரூ.67 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் ப.தனபால், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார்.

அதன் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் வந்த எனது தலைமையிலான அண்ணா தி.மு.க. அரசு, அமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளின் அடிப்படையில், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பயனை அனைத்து தரப்பு மக்களும் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தி வருகின்றது. இதனால்தான், தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் அளப்பரிய முன்னேற்றம் கண்டு, இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

சோழர் காலத்தில் இருந்தே தமிழகம் நீர் மேலாண்மையில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. அம்மாவின் அரசும் நீர் மேலாண்மைக்கு முன்னுரிமை அளித்து மழை நீர் சேகரிப்பை திறம்பட செயல்படுத்தியது.

6,278 குளங்கள் புதுப்பிப்பு

தமிழகத்தில் குடிமராமத்து திட்டத்தின் ரூ.1433 கோடியில் 6,278 குளங்கள், ஏரிகள், நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டன.

கிராமப்புறங்களில் ரூ.805 கோடி செலவில் 5,186 நீர்பாசன தொட்டிகளும், 25,987 குளங்களும் கிராம அபிவிருத்தி மற்றும் பஞ்சாயத் துறையால் புதுப்பிக்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் நீர்சேமிப்பு அதிகரித்துள்ளது.

நீர் பாதுகாப்பு முயற்சிகளை விரைவுப்படுத்துவதற்கும், நீர்நிலைகளின் சேமிப்பு திறனை அதிகரிப்பதற்கும் அம்மாவின் 2010ம் ஆண்டில் ‘தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் பெருக்குதல் மிஷனை அறிமுகப்படுத்தியது.

மேலும் மழைநீர் தேவையின்றி கடலில் செல்வதை தடுப்பதற்கும், குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தடுப்பணைகள் கட்டுவதற்கும் ரூ.1000 கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் பொதுப்பணித்துறையால் 160 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கிராம அபிவிருத்தி பஞ்சாயத்து ராஜ் துறையால் ரூ.959 கோடி செலவில் 42,635 சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டமும், நீர்சேமிப்பு அதிகரித்துள்ளதால் விவசாய பரப்பளவும் அதிகரித்துள்ளது.

நெல் உற்பத்தியில் சாதனை

டெல்டா மாவட்டங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரியதால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12–ந்தேதி திறக்கப்பட்ட தண்ணீர் 10 நாட்களுக்கு முன்னதாக கடைமடை பகுதியை வந்தடைந்தது. இதனால் டெல்டா பகுதிகளில் 4.12 லட்சம் ஏக்கர் சாகுபடி நடைபெற்று 30 வருட சாதனையை முறியடித்தது. இதனால் தமிழகத்தில் 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது.

புதிய வீராணம் திட்டத்தினை செயல்படுத்தி சென்னை மக்களின் தாகத்தை தீர்த்து வைத்தவர் ஜெயலலிதா. கண்ணன்கோட்டை –தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தினை அமைத்து, சென்னையின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்ய திட்டமிட்ட ஜெயலலிதாவின் கனவை, அண்ணா தி.மு.க. அரசு ரூ.380 கோடி செலவில் செயல்படுத்தி தற்போது நனவாக்கியுள்ளது.

இந்த திட்டத்தை சென்னை மக்களுக்கு அர்ப்பணித்த உள்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நீர் மேலாண்மைக்கு தேசிய விருது

தமிழக மக்களின் கனவுத் திட்டங்களான காவேரி – குண்டாறு இணைப்புத் திட்டம், அத்திக்கடவு – அவிநாசி திட்டம், மேட்டூர் அணை – சரபங்கா வடிநில நீரேற்றுத் திட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர்–குமாரமங்கலத்தில் கதவணை என பல்வேறு நீர்வள ஆதாரத் திட்டங்களை நிறைவேற்றி வரும் ஒரே அரசு, அம்மாவின் அரசு தான். தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தியதன் மூலம், இன்று தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வரும் பருவமழைக் காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் மேலும் அதிக அளவு உயர வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட முயற்சிகளால்தான், மத்திய அரசு 2019–2020ம் ஆண்டிற்கான நீர் மேலாண்மைத் திட்டங்களை இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாட்டை தேர்வு செய்து, தேசிய விருது வழங்கியுள்ளது.

கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், காவேரி ஆற்றின் குறுக்கே நஞ்சை புகளூரில் 1,140 மீட்டர் நீளத்திற்கும், 3 மீட்டர் உயரத்திற்கும், 406 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.8 டிஎம்சி தண்ணீரை சேமிப்பதோடு, 4,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

நடந்தாய் வாழி காவிரி, கோதாவரி – காவிரி இணைப்பு, காவிரி– வைகை– குண்டாறு இணைப்பு ஆகியவற்றுக்கு விரைவாக ஒப்புதல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அம்மா சென்னை மாநகரத்தை உலகத் தரத்துக்கு இணையாக மேம்படுத்த பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் வகுத்து செயல்படுத்தினார். அம்மாவி்ன் வழியில் செயல்படும் அம்மாவின் அரசும், அம்மாவின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற வகையில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தி வருகின்றது.

மெட்ரோ ரெயில்

3 வழித்தடம்

54 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டம்–1, தற்போது சென்னை பெருநகர் பகுதியில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு போதாது என்பதை உணர்ந்த அம்மாவின் அரசு, 61 ஆயிரத்து 843 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.90 கி.மீ. நீளத்திலான சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தது. இந்த இரண்டாம் கட்டத்தில் மாதவரம் முதல் சிப்காட் வரையில் ஒரு வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை ஒரு வழித்தடமும், மாதவரம் முதல் ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும் உள்ளது. மேற்கண்ட அனைத்து வழித்தடங்களும் அமைப்பதற்கு வெளிநாட்டு நிதி உதவி இறுதி செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ரூ.61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் மத்திய மாநில அரசின் 50 சதவீத பங்கு மூலதனத்துடன் நிறைவேற்ற அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ரூ.1,621 கோடியில் கோவையில் பாலம்

சாலைப் போக்குவரத்தினை மேம்படுத்துவதில் அம்மாவின் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இன்று அடிக்கல் நாட்டப்பட்ட, கோயம்புத்தூர் மாநகர், அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட சாலை வழித்தடம் அமையவுள்ள சாலையானது, கோயம்புத்தூர் மாநகருக்கு மிக முக்கியமான சாலையாகும். இச்சாலையில் பல பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையம் அமைந்துள்ளதால் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. எனவே, இந்த உயர்மட்ட சாலை வழித்தடம் அமைந்தால் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும். இத்திட்டத்திற்கு 1,621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ரூ.41 ஆயிரம் கோடி தொழில் முதலீடு

தொழில் முதலீடுக்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு. நடப்பாண்டில் ரூ.40 ஆயிரத்து 719 கோடியில் தொழில் முதலீடு செய்ய 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் 65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வண்ணம் கவனத்துடன் ஊரடங்கை அமலாக்குவதிலும் தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டது. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் கோரஸ் என்ற புதுமையான திட்டத்தை செயல்படுத்தி, இதுவரை 1,202 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு 138 கோடி ரூபாய் அளவிற்கு பிணையில்லா கடன்களை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாகத் தடுக்கவும் நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

இன்று திறந்து வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களை, முழுமையாக நிறைவேற்ற அல்லும் பகலும் அயராது உழைத்த அனைத்து அலுவலர்களுக்கும், பொறியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும், உழைப்பாளர் நண்பர்களுக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரதமருக்கு துணை நிற்போம்

பிரதமர் கடுமையான, சோதனையான இந்தத் தருணத்தில் நாட்டு மக்களின் ஒத்துழைப்போடு மிகத் திறமையாக, வல்லரசு நாடுகளே பாராட்டுகின்ற அளவிற்கு ஆட்சி செய்வதை நாம் பார்க்கின்றோம். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு அல்லும் பகலும் பாராமல் உழைத்து, கடுமையாக முயற்சி செய்து வருகிறார் பிரதமர். ஆகவே, அவருடைய கடுமையான முயற்சிக்கு தமிழகம் எப்பொழுதும் துணை நிற்கும் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

கூட்டணி தொடரும்

மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமருக்கு துணையாக இருந்து பிரதமர் போடுகின்ற திட்டங்களை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வல்லரசு நாடுகளில் இந்தியாவும் இடம் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்து வருகின்ற காட்சியை நாம் பார்க்கின்றோம். ஆகவே, வல்லரசு நாடுகள் பாராட்டுகின்ற அளவிற்கு இந்தியா வளர்ந்திருக்கிறதென்று சொன்னால், பிரதமர் நரேந்திர மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் எடுத்த முயற்சிகள்தான் காரணம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்து, நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா தி.மு.க. 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்திருக்கிறது, பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்குத் தந்திருக்கிறது, தேசிய அளவில் பல்வேறு விருதுகளை நாங்கள் பெற்றிருக்கின்றோம், அனைத்துத் துறைகளிலும் விருதுகளை குவித்துக் கொண்டிருக்கின்றோம். அந்தளவிற்கு சிறப்பான ஆட்சி இப்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீண்டும், வருகின்ற 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் எங்களுடைய கூட்டணி அதிக இடங்களில், பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கழக ஆட்சி அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களின் அழைப்பினை ஏற்று தமிழகத்திற்கு வருகை தந்து முடிவுற்ற பணியை திறந்து வைத்தும், பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக மக்களின் சார்பாக மனமார்ந்த, எனது சார்பாக மனமாந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விழாவை சிறப்புற நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *