செய்திகள் வாழ்வியல்

சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்ட ஆதித்தமிழர் நாகரிகத்தை வெளிப்படுத்தும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியம்!

Spread the love

மனித இனத்தின் தொன்மையை அவர்களுடைய நாகரிகத்தை அறிவியல் மனப்பான்மையை பண்பாட்டை அளக்க உதவுவது ஆதிகாலத் தொல்லியல் சான்றுகள். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மனிதர்களின் இனக்குழுவைக் கண்டுபிடிக்கவும் இத்தகைய தொல்லியல் தரவுகள் உதவுகிறது.

உலகம் முழுவதும் அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தொல்லியல் பானைகள், அணிகலன்கள், படிமங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் அருங்காட்சியங்கள் மூலம் காட்சிப்படுத்திப் பாதுகாக்கப்பட்டு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறது.

அப்படியான ஒரு முயற்சியாக தற்போதைய 2020– 21 க்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் 5 இடங்களில் தொல்லியல் அருங்காட்சியங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதில் ஒன்று நமது தமிழத்தில் உள்ள ஆதிச்சநல்லூர்.

மேலும் நாட்டின் தொன்மரபு மற்றும் பண்பாட்டை பாதுகாப்பதற்காக புதிதாக ஒரு மத்திய நிறுவனம் அமைக்கப்படும் எனவும் அத்துடன் மத்திய கலை பண்பாட்டுத்துறைக்கு ரூ.3,150 கோடி ஒதுக்கியும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அகழ்வாய்வு தொடக்கம்

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 1868-ல் தொடங்கியது. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886-ல் இங்கு இனப் பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர். சுமார் 135 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர் சோகார் ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்பொருட்களை பெர்லின் அருங்காட்சியத்தில் வைத்தார். இதற்கு ஆதிச்சநல்லூர் புதையல் என்றே பெயர் வைத்தார்.

அதேபோல் 1900-ல் இந்திய தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்ஸ்சாண்டர் ரீ தமிழகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகளை நடத்தி உள்ளார். 1902 ல் இருந்து 1904 வரை ஆதிச்சநல்லூரை முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்தது அலெக்ஸ்சாண்டர் ரீ தான். இவர் நடத்திய ஆய்வில், ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.

கூடவே ஆதித்தமிழர்களின் மண்பாண்டங்கள், ஈட்டி, கோடரி, வாள், கத்தி உள்ளிட்டவைகளும் கிடைத்தன. ஆய்விற்கு பின்பு, எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதை குழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன என்று கூறியுள்ளார். இவற்றை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்தனர். முதன் முறையாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய நாகரிகம் இருந்தது என்பதற்கான சான்றுகளாக இந்த ஆய்வுகள் இருந்தன.

ஆதிச்சநல்லூர்ப் பறம்பு

இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தொல்லியல் ஆய்வு 1900-04 ஆம் ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிதான். அதன்பிறகே 1924-ம் ஆண்டு சிந்து சமவெளிப் பகுதி மற்றும் அரிக்கமேடு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் முற்பட்டது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று.

நெல்லை – திருச்செந்தூர் ரயில் பாதையில் ஆதிச்சநல்லூர் ரயில் நிலையம் உள்ளது. ஆதிச்சநல்லூர்ப் பறம்பு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே மிகப் பிரபலமாகிவிட்டதால் இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

ஆதிச்சநல்லூர் 114 ஏக்கர் பரப்புள்ள படிகக் கல் பாறைகள் (Quartzite) நிரம்பிய மேட்டு நிலம் ஆகும். இப்பறம்பு அமைந்துள்ள இடத்தை அடுத்து ஆதிச்சநல்லூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர் பறம்பு என வழங்கப்படுகிறது. இப்பறம்பில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாகப் புதைக்கப்பட்டிருப்பதால் தாழிக்காடு என்றும் கூறப்படுவதுண்டு.

மீண்டும் அகழ்வாய்வு

மீண்டும் 2004-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை , முனைவர் தியாக சத்தியமூர்த்தி மற்றும் குழுவினரை அமைத்து ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு நடத்தியது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பகுதி, தமிழர்களின் கடல் கடந்த வாணிபத் தொடர்புகள், திருமண முறைகள், தனித்தனி இடுகாடுகள், கலைப் பண்பாடு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் மிக முக்கியமான ஆவணங்கள் இங்கு கிடைத்துள்ளன.

இதில் கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்து அதன் முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் 4 ம் தேதி மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த முடிவுகளில் இங்கு கிடைத்த பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905 மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.

ஆதிச்சநல்லூர் இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தபோது ஒரு முக்கியமான பண்பாட்டு சிறப்பு மிக்க இடமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் மூன்றாம் தமிழ்ச் சங்க காலத்தினைச் சார்ந்த சங்க இலக்கியங்களில் ஆதிச்ச நல்லூர் பற்றிய குறிப்புகள் இல்லை. இதை வைத்து பார்க்கும்போது மூன்றாம் தமிழ் சங்கம் தோன்றி மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம் என்பதும் அறிஞர்கள் முடிவு.

4 ஆயிரம் ஆண்டு முந்தையது

எனவே சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகமாக இந்த ஆதிச்ச நல்லூர் நாகரிகம் கருதப்படுகிறது. அதற்கு உறுதியாக 2004-2005 ஆண்டுகளில் இங்கு அகழ்வாய்வு நடந்தபோது கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த அறிவியலாளர்கள், இவை சுமார் கிமு 1,700 ஆண்டுகளுக்கு முந்தியவை : அதாவது இன்றைக்கு 3,700 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்று தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை தமிழ் நாட்டில் கிடைத்த பண்பாட்டு எச்சங்களில் ஆதிச்சநல்லூர்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் தமிழகத்தில் எங்கெல்லாம் அகழாய்வு செய்கிறோமோ அங்கெல்லாம் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் கிடைக்கின்றன. ஆக அவை தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக அப்பொழுது இருந்தார்கள் என்பதன் சான்றாக உள்ளன.

ஆனால் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு செய்த போது எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைக்கவில்லை. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எழுத்தறிவு வருவதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்ச நல்லூர் நாகரிகம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதுவரை அங்கு அகழாய்வு செய்தவர்கள் இடுகாட்டு பகுதிகளிலும் சுடுகாட்டு பகுதிகளிலும் மட்டும் ஆய்வு செய்துள்ளார்கள்.

இனிமேல் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த பகுதிகள்தான் மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளாக இருக்கும். அவற்றையும் ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் தமிழக வரலாற்றுக்குக் கிடைக்கும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

அத்துடன் தொல்லியல் மாதிரிகளின் காலத்தை கார்பன் முறையில் நிர்ணயிக்கும் தொழில் நுட்பம் இந்தியாவில் மும்பையில் உள்ள ஆய்வகத்தில் மட்டுமே உள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு அனுப்பி தொல்லியல் பொருட்களின் காலத்தை கணிப்பு செய்ய வேண்டியுள்ளது.

இந்தியாவிலேயே உலகத்தரத்திலான கார்பன் ஆய்வகத்தை நிறுவ வேண்டும் என்பதும் அனைவருடைய விருப்பமாக இருக்கிறது.

* * * 

கீழடியை இணைக்க வேண்டும்!

மத்திய அரசின் தொல்லியல் ஆய்வகம் குறித்து கீழடி ஆய்வை வெற்றிகரமாக மேற்கொண்டு தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது:–

மத்திய அரசு அறிவித்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் அருங்காட்சியகம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அதேவேளை கீழடியையும் இந்த அருங்காட்சியக பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும் என்பதே எங்களைப் போன்றோரின் கோரிக்கை. ஏனெனில் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பகுதியான 114 ஏக்கர் பகுதியும் மனிதர்களை புதைக்கப் பயன்படுத்திய இடுகாடு (Burial Ground) பகுதி அங்கு கிடைத்துள்ள சான்றுகள் பெரும்பாலும் முதுமக்கள் தாழிகளாகவே உள்ளது. மாறாக கீழடி என்பது மனிதர்கள் வாழ்ந்த நாகரிகத்தை வெளிப்படுத்தும் இடம்.

ஆனால் ஆதிச்சநல்லூர் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு தொல்லியல் அருங்காட்சியம் அமைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதேவேளை கீழடியையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டு அறிவித்தால் சிறப்பாக இருக்கும். மேலும் அதில் என்னென்ன வசதிகளுடன் அமைக்கப்படுகிறது என்பது, முழுமையான அறிவிப்பு வந்த பிறகே நமக்கு தெரியும் என்றார்.

–மா.இளஞ்செழியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *