செய்திகள்

தீபாவளிக்கு கூடுதலாக 12,575 சிறப்பு பஸ்கள்

Spread the love

சென்னை, செப்.20-

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து 12,575 சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன. சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும். இதற்கான முன்பதிவு அக்டோபர் 23-ந் தேதி தொடங்குகிறது.

தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை நாட்களையொட்டி, வெளியூர்களில் வசிப்பவர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்குகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில், போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் போக்குவரத்து மண்டல அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னையில் இருந்து 4265 பஸ்கள்

கூட்டத்தில், சிறப்பு பஸ்கள் இயக்குவது, தற்காலிக பஸ் நிலையங்கள் அமைப்பது, போக்கு வரத்து நெரிசல் இன்றி பஸ்களை இயக்குவது மற்றும் முன்பதிவு ஆகியவை குறித்த கருத்துகளை அதிகாரிகளிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டு அறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சென்னையில் இருந்து பாதுகாப்பாக சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

அந்த வகையில் அக்டோபர் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சென்னையில் இருந்து 4,265 சிறப்பு பஸ்களும், பிற ஊர்களில் இருந்து 8,310 சிறப்பு பஸ்களும் என மொத்தம் 12 ஆயிரத்து 575 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தினசரி இயக்கப்படும் 2,225 பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சென்னையில 6 இடங்களில் இருந்து

* ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* வேலூர், காஞ்சீபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கடந்த ஆண்டு போல் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* தஞ்சாவூர், கும்பகோணம், விக்கிரவாண்டி மார்க்கமாக செல்லும் பஸ்கள் தாம்பரம் ‘மெப்ஸ்’ பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* கிழக்கு கடற்கரை சாலை (ஈ.சி.ஆர்.) மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* மதுரை, திருநெல்வேலி, கோவை, ராமநாதபுரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

இந்த அனைத்து சிறப்பு பஸ்களை ஒருங்கிணைக்கும் விதமாக மாநகர பஸ்களை இயக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முன்பதிவு

சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான சிறப்பு கவுண்ட்டர்கள் மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய 3 இடங்களில் செயல்படும். முன்பதிவு அடுத்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி தொடங்குகிறது.

சிறப்பு பஸ்கள் அல்லாத பிற அரசு பஸ்களுக்கான முன்பதிவு ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதியில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் ஏறுவதற்கு ஊரப்பாக்கம் பஸ் நிலையத்தை தற்காலிக பஸ் நிலையமாக பயன்படுத்தி வந்தோம். இந்த ஆண்டு அங்கு கட்டுமான பணிகள் நடைபெறுவதால், அங்கு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் முடிவுகள் எடுக்கப்படும்.

கோவை, திருப்பூர்

தமிழகத்தின் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் ஆகியவற்றில் இருந்தும் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே அடுத்த ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும்.

தீபாவளி பண்டிகை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்புவதற்கும் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு அக்டோபர் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4,627 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,921 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து மிகுந்த நேரங்களில் (பீக் அவர்ஸ்) கனரக வாகனங்கள் சென்னை நகரத்துக்குள் வராமல் இருக்க போக்குவரத்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு 4 நாட்கள் விடுமுறை இருப்பதால், கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முதல் முறையாக ஆயுதபூஜைக்கும் சிறப்பு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்கள், தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்தும், வேலூர், காஞ்சீபுரம், ஓசூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

கடந்த வருட தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 3/11/2018 முதல் 5/11/2018 வரை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், அண்ணாநகர் மேற்கு மாநகரப் பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம், சைதாப்பேட்டை நீதிமன்ற பேருந்து நிறுத்தம் ஆகிய 5 இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,275 பேருந்துகளுடன் 4,005 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவற்றில், 7,19,480 பயணிகள் பயணம் செய்துள்ளார்கள்.

ஆன்லைனில் முன்பதிவு

பயணிகள் முன்பதிவு செய்து கொள்ள, நடைமுறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக இணையதள வசதியான www.tnstc.in உடன் www.redbus.in, www.paytm.com மற்றும்www.busindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் முன்பதிவு கவுண்டர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது 2 லட்சத்து 4 ஆயிரம் 115 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். தற்பொழுது 33,984 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள அபராத தொகையை குறைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார். அபராத தொகை தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *